திருவள்ளூர் : திருவள்ளூர் ரயில் நிலையத்தில், ரகசிய கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்தும் பணி, மும்முரமாக நடைபெற்று வருகிறது.பயங்கரவாத
அச்சுறுத்தல் காரணமாக, முக்கிய ரயில் நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த
ரயில்வே நிர்வாகம் தீர்மானித்து, அதன்படி, முக்கிய ரயில் நிலையங்களுக்கு
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள சென்னை
மண்டலத்துக்குட்பட்ட, முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்
ளது.சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள, திருவள்ளூர் ரயில் நிலையம்
வழியாக, தினசரி, 79 ஜோடி புறநகர் ரயில் சேவைகள், அரக்கோணம், வேலூர், திருத்தணி, சென்னை சென்ட்ரல், கடற்கரை, கும்மிடிப்பூண்டி
உள்ளிட்ட, பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன.அத்துடன், சப்தகிரி,
ஏற்காடு, காவேரி, பெங்களூரு, திருப்பதி, கருடாத்ரி, ஏலகிரி மற்றும்
ஆலப்புழை - தன்பாத் ஆகிய விரைவு ரயில்களும், மங்களூர், மும்பை மெயில்
உள்ளிட்ட, 10 நீண்ட தூர ரயில்களும் இங்கு நிறுத்தப்படுகின்றன.தினமும்
ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பை
அதிகரிக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, திருவள்ளூர்
ரயில் நிலையத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மும்முரமாக
நடைபெற்று வருகிறது.இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர்
கூறும் போது, 'சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை சென்ட்ரல், கடற்கரை,
எழும்பூர், மாம்பலம், தாம்பரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர் ஆகிய ஏழு
ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, 10 கோடி ரூபாய் செலவில் ரகசிய
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் ரயில்
நிலையத்தில் மொத்தம் உள்ள, ஆறு நடைமேடைகளில் (பிளாட்பாரம்) 16 ரகசிய
கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக, கேபிள் பொருத்தும் பணி தற்போது
மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், மெட்டல் டிடெக்டர் நுழைவாயிலும்
பொருத்தப்பட உள்ளது. மேலும், கையடக்க மெட்டல் டிடெக்டர் கருவியும் ரயில்வே
பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், திருவள்ளூர் ரயில்
நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து
தடுக்க முடியும்,' என்றார்.பி.முரளிதரன்