திருத்தணி : சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பத்தாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை கிடைக்காததால், மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு ஆயிரத்து 336 பள்ளிகள் உள்ளன. இதில் மேனிலைப் பள்ளிகள் 287, உயர்நிலைப் பள்ளிகள் 283, நடுநிலைப் பள்ளிகள் 360 மற்றும் ஆயிரத்து 406 தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகிறது.தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களை, அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தது. பின்னர் மாவட்டங்களில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. பாடப் புத்தகங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கு அச்சப்படுகின்றனர். குறிப்பாக, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட அருங்குளம் பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில், 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை சமச்சீர் பாடப் புத்தகங்கள் கொடுக்கவில்லை.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்கள் சரியாக கொடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம் அந்த பள்ளிக்கு பத்தாம், ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் இதுவரை மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்பவில்லை. பள்ளி திறந்து மூன்று மாதங்கள் முடிய உள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் ஐந்து பாடப் புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாக உள்ளது.இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும் போது, ''மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் மாவட்டத்தில் மேனிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை எவ்வளவு, எந்த பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர் என சரியாக கணக்கெடுக்காமல், குத்துமதிப்பாக பாடப் புத்தகங்களை அனுப்பியுள்ளது.இதனால், சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விட புத்தகங்கள் அதிகமாக வந்துள்ளது. சில பள்ளிகளில் பாதி மாணவர்களுக்கு கூட பாடப் புத்தகங்கள் வரவில்லை. நாங்களும் எங்களுக்கு தெரிந்த பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அங்கு சென்று புத்தகங்களை எடுத்து வந்து மாணவர்களுக்கு தருகிறோம்.இதற்கு ஆகும் செலவு கூட நாங்களே செய்கிறோம். எத்தனை முறை இதுபோல் பள்ளிகளை தொடர்பு கொண்டு புத்தகங்களை வாங்குவோம். இதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும்,'' என்றார்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''அனைத்துப் பள்ளிகளுக்கும் படிப்படியாக புத்தகங்களை அனுப்பி வருகிறோம். சில பள்ளிகளில் அதிகமாக வந்துள்ள புத்தகங்களை புத்தகங்கள் இல்லாத பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.