உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முழு கொள்ளளவை எட்டியது பூண்டி ஏரி: உபரி நீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டியது பூண்டி ஏரி: உபரி நீர் வெளியேற்றம்

ஊத்துக்கோட்டை:பூண்டி ஏரி தன் முழு கொள்ளளவை எட்டியதால், அதிகப்படியான உபரிநீர், ஷட்டர் மூலம், நேற்று காலை 10 மணிக்கு, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வெளியேற்றினார்.தமிழக - ஆந்திர மாநில அரசுகளின் ஒப்பந்தப்படி, கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், சாய் கிருஷ்ணா கால்வாய் வழியாக, பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீர் மற்றும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை ஆகியவற்றால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.இந்நிலையில் ஏரியின் மொத்த நீர்மட்டமான, 35 அடியில் 34.80 அடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும், தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிகப்படியான உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி பூண்டி ஏரியில் உள்ள, 16 ஷட்டர்களில், 4வது ஷட்டரை திறந்து வைத்தார்.துவக்கத்தில் வினாடிக்கு, 234 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, ஏரிக்கு, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 713 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள 'லிங்க்' கால்வாய் மூலம், வினாடிக்கு 423 கன அடி வீதம், தண்ணீர் திறந்து விடப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு, 90 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு அங்குள்ள நீரேற்று நிலையம் வழியாக, சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. ஏரியில் தற்போது, 3077 மில்லியன் கன அடி நீர் உள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், ஷட்டர் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை மற்றும் நீர்வரத்தை பொறுத்து, திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். இங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக, புழல் மற்றும் சோழவரம் ஏரிக்கு அனுப்பப்படும். இதனால், உபரி நீர் வீணாவது தடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை