உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பராமரிப்பு இல்லாத டப்பா பஸ்கள் படாதபாடுபடும் ஓட்டுநர்கள்

 பராமரிப்பு இல்லாத டப்பா பஸ்கள் படாதபாடுபடும் ஓட்டுநர்கள்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளை முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், ஓட்டுநர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திற்கு, திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் சென்னை கோயம்பேடு ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளில், இருந்து, 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இப்பணிமனைகளில், மொத்தம், 900 ஓட்டுநர், நடத்துநர், 70 தொழிற்நுட்ப ஊழியர்கள், 25 துாய்மை பணியாளர்கள் இருந்தனர். குறைப்பாடு தற்போது, 500 ஓட்டுநர், நடத்துநர், 30 தொழிற்நுட்ப ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். பேருந்துகள் சுத்தம் செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில், 3 பேர் மட்டுமே ஒவ்வொரு பணிமனையில் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டாக, 400 பேர் ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநராக பணிபுரிந்து வருகின்றனர். பணிமனைகளில் தொழில்நுட்ப ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள் இல்லாததால், பல பேருந்துகள் பராமரிப்பின்றி உள்ளன. பேருந்துகள் பழுதாகியும், கதவு, ஜன்னல், கண்ணாடி, மேற்கூரை போன்றவை சேதமடைந்துள்ளன. பேருந்துகளை பழுது பார்ப்பதற்கு முக்கிய உதரிபாகங்கள் பணிமனைகளில் இருப்பு இல்லை. இதனால் பழுதாகி உள்ள பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்க வேண்டிய சூழ்நிலை உள்ளன. இதுதவிர ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமுடிந்ததும் பேருந்துகளில் உள்ள குறைப்பாடுகள் குறித்து கிளை மேலாளர், தொழில்நுட்ப ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், மறுநாள் வேலைக்கு வரும் போது பழுது பார்க்காத பேருந்துகள் இயக்க வேண்டும் என, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். பேருந்துகள் பராமரிப்பு இல்லாததால் ஓட்டுநர், நடத்துநர் வேலைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்கள் நன்றாக இருக்கும் பேருந்து கிடைத்தால் மட்டுமே வேலை செய்கின்றனர். இதனால், ஒவ்வொரு பணிமனையிலும், குறைந்த பட்சம், 5 - 10 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. உதிரி பாகங்கள் இது குறித்து அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது மாவட்டத்தில், இரண்டு சாய்தள பேருந்து, 5 குளிர்சாதன பேருந்து, 75 சாதாரண பேருந்துகள் என மொத்தம், 82 பேருந்துகள் கடந்த ஆறு மாதத்தில் வந்துள்ளன. இன்னும் புதிய பேருந்துகள் விரைவில் வரும். பேருந்து உதிரி பாகங்கள் பணிமனைக்கு வருவதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும், முடிந்த வரையில் உதரிபாகங்கள் வாங்கி சரி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை