| ADDED : பிப் 09, 2024 08:20 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், வெங்கத்துார் ஆகிய மூன்று ஊராட்சி வழியே, வெள்ளேரிதாங்கல் வழியாக பாப்பரம்பாக்கம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இந்த சாலை முழுதும் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் இவ்வழியே நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இரவு நேரங்களில், விபத்தில் சிக்கி வந்தனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் 2.9 கி.மீ., துாரமுள்ள இந்த ஒன்றிய சாலையை 1.50 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்டில் துவங்கி நடந்து வருகிறது.இந்நிலையில் தற்போது சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதற்கு ஒன்றிய அதிகாரிகள் சாலை சீரமைப்பு்பணிகளை முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்றிய சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.