அரக்கோணம் லோக்சபா தொகுதியில், கடந்த 2014ல் அ.தி.மு.க., சார்பில் தற்போதைய கழக அமைப்பு செயலர் திருத்தணி கோ.அரி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மேலும் இவர், ஆறு சட்டசபை தொகுதிகளிலும் அரசு விழாக்கள் மற்றும் கட்சி ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றார். இதுதவிர, அவ்வப்போது தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தும், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஓதுக்கீடு செய்தும் வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.இதனால், ஆறு சட்டசபை தொகுதியிலும் கட்சி நிர்வாகிகள் இடையே நல்லபெயர் இருந்தது. அரக்கோணம் லோக்சபா தொகுதியில் அரி மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை.இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், அரக்கோணம் தொகுதி, அரிக்கு 'சீட்' தருவதற்கு கட்சி தலைமையிடம் தயாராக இருந்தும், அரி 'தனக்கு சீட் வேண்டாம், வேறு யாருக்காவது கொடுங்கள்' என ஒதுக்கி விட்டார்.இதற்கு காரணம், தற்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆகலாம். ஆனால், மத்தியில் எந்த அமைச்சர் பதவியும் கிடைக்காது. ஆகையால் வரும், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில், திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தனக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு துறை அமைச்சர் பதவி வழங்க கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., தயாராக உள்ளார். இதனால் 'எம்.பி., பதவி வேண்டாம்; அமைச்சர் பதவி வேண்டும்' என எண்ணி, லோக்சபா தேர்தலில் சீட் வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார் என, அவரது ஆதரவாளர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கூறுகின்றனர்.இதனால் தான் அரக்கோணம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் பேரூராட்சி தலைவரும், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலருமான ஏ.எல்.விஜயன் என்பவரை, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.- -நமது நிருபர்- -