| ADDED : பிப் 11, 2024 11:09 PM
ஆர்.கே.பேட்டை,- ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகையில், அம்மையப்பர் ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 8ம் தேதி மதியம், உணவு சாப்பிடும்போது நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக வங்கனுார், சோளிங்கர், பீரகுப்பம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின் மேல் சிகிச்சைக்காக, திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது, பணியில் இருந்த மேலும், 10 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த சுகாதார துறையினர், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி கோட்டாட்சியர் தீபா, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, தொழிற்சாலையில் சுகாதார துறையினர் சேகரித்த குடிநீர் மாதிரி ஆய்வு முடிவு தெரியவரும் வரை, தொழிற்சாலையை திறக்கக்கூடாது என உத்தரவிட்டார்.