| ADDED : மே 28, 2024 12:47 AM
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் இருந்து 3 கி.மீ.,யில் உள்ளது மீனாட்சிபுரம். முழுக்க, முழுக்க விவசாய கிராமமான இங்கு 80க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. 200 பேர் வசித்து வந்தனர். ௨௫ ஆண்டுகளுக்கு முன் ஊரில் ஏற்பட்ட பிரச்னையால் ஒவ்வொருவராக பக்கத்து ஊரில் குடியேற துவங்கினர்.கந்தசாமி நாயக்கர், 80, என்பவர் மட்டும், உயிர் போனாலும் ஊரை விட்டு வரமாட்டேன் என்று அந்த ஊரிலேயே வசித்து வந்தார். ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டு, அவரே தன் வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்தார்.பல மாதங்களுக்கு முன் செக்காரக்குடியில் வசித்து வந்த கணபதி, 51, என்பவர் தன் மனைவி இறந்து விட்டதால் மீனாட்சிபுரத்திற்கு வந்து ஒரு வீட்டில் தங்கினார். சொந்தமாக ஆடு, மாடு வாங்கி மேய்த்து வந்தார்.அங்கு ஏற்கனவே வசித்து வந்த கந்தசாமிநாயக்கருக்கு துணையாகவும் இருந்து வந்தார். இருவரும் நட்புடன் ஒரே வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். இதனால் துாத்துக்குடி மாவட்டத்தில் இருவர் மட்டுமே உள்ள கிராமமாக மீனாட்சிபுரம் இருந்தது. இந்நிலையில், கந்தசாமிநாயக்கர் நேற்று முன்தினம் இறந்தார். அவரது மகன் பாலகிருஷ்ணன் காசிலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். தந்தையை அங்கு துாக்கி சென்று இறுதிச்சடங்குகள் செய்ய முடிவு செய்தார். ஆனால் அவரது சகோதரிகள், தந்தையின் ஆசைப்படி அவரை மீனாட்சிபுரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.இதனால், காசிலிங்கபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்ட கந்தசாமிநாயக்கர் உடல் மீண்டும் மீனாட்சிபுரத்திற்கு எடுத்து வரப்பட்டது. நேற்று மதியம் அங்கு எரியூட்டப்பட்டது. தற்போது கணபதி மட்டும் அங்கு உள்ளார்.அவர் தொடர்ந்து இங்கு வசிப்பாரா அல்லது அவரது சொந்த ஊருக்கு செல்வாரா என்பது தெரியவில்லை. சொந்த ஊருக்கு சென்று விட்டால் ஆளே இல்லாத ஊராக மீனாட்சிபுரம் மாறிவிடும்.