உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புத்தகங்களை மாணவர்கள் துாக்குவதாக புகார்

புத்தகங்களை மாணவர்கள் துாக்குவதாக புகார்

துாத்துக்குடி:தமிழகம் முழுதும் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 6ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளி துவங்கிய முதல் நாளில் மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருட்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.அனைத்து கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான வகுப்புகளுக்கு நோட்டு, புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் 90 சதவீதம் வந்து சேர்ந்துள்ளன. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என 90 பள்ளிகள் உள்ளன.இதை போன்று தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என, 580 பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்தவர்கள் புத்தகம் மற்றும் நோட்டுக்களை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், சில அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து வந்து புத்தகம் மற்றும் நோட்டு பண்டல்களை வாகனத்தில் ஏற்றும் பணிகளை செய்து வருகின்றன.இளம் சிறார்கள் மிகுந்த கடினத்துடன் பண்டல்களை துாக்கி செல்லும் நிலை உள்ளது. அதை கல்வி துறை அதிகாரிகள் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. சிலர் புத்தகம் மற்றும் நோட்டுக்களை குப்பை போல அள்ளி ஆட்டோக்களில் திணித்துச் செல்லும் நிலை காணப்படுகிறது.பள்ளி மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசும், பள்ளிக்கல்வித்துறையும் பலமுறை அறிவுறுத்தியும் அதை மீறி பள்ளி மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.அதை கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை