உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடியில் தொடரும் கொலைகள் கஞ்சா போதை நபர்களால் மக்கள் அச்சம்

துாத்துக்குடியில் தொடரும் கொலைகள் கஞ்சா போதை நபர்களால் மக்கள் அச்சம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் மது, கஞ்சா போதை காரணமாக இம்மாதம் இதுவரை ஆறு கொலைகள் நடந்துள்ளன. நேற்று ஒரே நாளில் இரு கொலைகள் நடந்துள்ளன.துாத்துக்குடி, குரூஸ்புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 56; வக்கீல் குமாஸ்தா. இவர், துாத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மத்தியபாகம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா வியாபாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொலை தொடர்பாக இரு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து, 40. இவர், அப்பகுதியில் வாழை தோட்டத்தில் நின்றபோது மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.துாத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் மட்டும் ஆறு கொலைகள் நடந்துள்ளன. இதில், நான்கு கொலைகள் மது, கஞ்சா போதை தொடர்பானவை. இரு கொலைகள் குடும்ப தகராறு தொடர்புடையவை.துாத்துக்குடியில் கஞ்சா போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன் என்பவரும், மதுபோதையில் தாயை திட்டிய சத்தியமூர்த்தி என்பவரை அவரது 15 வயது மகன் கொலை செய்தது, மது போதையில் தாயை, மகன் வெட்டி கொலை செய்தது என, 20 நாட்களில் மாவட்டத்தில் நிகழ்ந்த கொலைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.இரவில் மக்கள் வெளியே நடமாட பயப்படும் அளவுக்கு கொலை, போதையில் ஏற்படும் தகராறுகளும் அரங்கேறி வருகின்றன. மாவட்ட காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைதான வாலிபர்களுக்கு 'கட்டு'

வக்கீல் குமாஸ்தா பால்ராஜ் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், துாத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கந்த சுப்பிரமணியன், 28, மதுரை ஜெயராமன், 27, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் கஞ்சா விற்றதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பியோடிய இருவரும் கீழே விழுந்ததில் கை முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் கூறியதாவது:பால்ராஜ் பல தொழில்கள் செய்து வந்துள்ளார். அவரிடம் கஞ்சா வாங்கித் தருமாறு கந்த சுப்பிரமணியன், 25,000 ரூபாய் கொடுத்துள்ளார். பணம் பெற்று பல மாதங்கள் ஆகியும் வாங்கிக் கொடுக்காமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பால்ராஜை மது அருந்த வருமாறு கந்த சுப்பிரமணியன் அழைத்துள்ளார். சைக்கிளில் கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு மறைவிடத்திற்கு சென்ற பால்ராஜ், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, பணம் கேட்டதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இருவரும் சேர்ந்து பால்ராஜின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி