விஜிலென்ஸ் ரெய்டில் கணக்கில் வராத பணம்
துாத்துக்குடி, விக்கிரவாண்டி பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது.துாத்துக்குடி, போல்பேட்டையில், ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் உள்ளது. இதன் மூன்றாவது தளத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பீட்டல் பால் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அலுவலகத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்தவர்களின் மொபைல் போன்களை பறித்துக் கொண்ட போலீசார் அவர்களை கண்காணித்தனர்.சோதனையில், கணக்கில் வராமல் இருந்த 3 லட்சத்து, 63,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை வைத்திருந்தது தொடர்பாக, தணிக்கை பிரிவு மாவட்ட பதிவாளர் சதாசிவம், புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக உதவி பத்திரப்பதிவு அலுவலர் செல்வகுமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே போல, விக்கிரவாண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி, 2.14 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, சார் - பதிவாளர் சூர்யாவிடம் விசாரணை நடத்தினர்.கடந்தாண்டு இதே அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். அப்போதும் சூர்யா தான் சார் - பதிவாளராக இருந்தார்.மேலும், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியளாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 5 லட்சத்து, 60,000 ரூபாய் சிக்கியது. உதவி கோட்ட பொறியாளர் ரெங்கபாண்டி மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடக்கிறது. - நமது நிருபர்கள் குழு -