நாட்டுப்படகிற்கு தீ வைப்பு ரூ.15 லட்சம் பொருள் நாசம்
துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே நாட்டுப்படகிற்கு தீ வைக்கப்பட்டதில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. துாத்துக்குடி, லுார்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 45, என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகு நேற்று முன்தினம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படகு மூலம் தினமும், 15 பேர் சங்கு குளித்தல் தொழிலுக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு திடீரென நாட்டு படகு தீ பிடித்து எரிந்தது. மர்ம நபர்கள் சிலர் படகுக்கு தீ வைத்து, தப்பியதாக கூறப்படுகிறது. அப்பகுதியில், 'சிசிடிவி' கேமராக்கள் இல்லாததால் அந்த மர்ம நபர்கள் குறித்த விபரம் தெரியவில்லை. எனினும், படகு இன்ஜின், சங்கு குளித்தலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள், வலைகள் என, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் சேதமடைந்தன. பார்த்திபன் புகாரில், மரைன் போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.