| ADDED : ஜூலை 11, 2011 09:30 PM
திருப்பூர் : தென்மாவட்ட பஸ்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக,
திருப்பூர் - தாராபுரம் ரோடு உள்ளது. இந்த ரோடு, உள்ளூர், வெளியூர்
செல்லும் பஸ்கள், லாரிகள், டூவீலர்கள் போக்குவரத்தால் எப்போதும் பரபரப்பாக
காணப்படுகிறது. ஒருவழிச்சாலை என்ப தால் இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் வேக
கட்டுப்பாட்டை கடைபிடிப்பதில்லை. தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் பகுதியில்
திருப்பூர் அரசு மருத்துவமனை செயல்படுகிறது; பல்வேறு சிகிச்சைக்களுக்காக
தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். நல்லூர், பெரிச்சிபாளையம் பகுதிகள்
சந்திக்கும் அரசு மருத்துவமனை எதிரில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த
வேகத்தடையும் இல்லை. மருத்துவமனை பகுதி என்று கூட எண்ணாமல், இரு சக்கர,
நான்கு சக்கர வாகனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அசுர வேகத்திலேயே
செல்கின்றன. அதிவேக வாகனங்களுக்கு மத்தியில், மருத்துவமனைக்கு வரும்
நோயாளிகள், ரோட்டை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஒருபுறம் இருந்து
மற்றொருபுறம் ரோட்டை கடக்க முயலும்போது, வாகனங்களில் சிக்கி விபத்து
ஏற்படும் அபாயம் உள்ளது. கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், வாகனங்களின்
வேகம் கண்டு மிரண்டு, அப்படியே நின்று விடுகின்றனர். மருத்துவமனை எதிரிலேயே
உள்ளூர் பஸ்கள் நின்று செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கிச்செல்ல, பஸ்கள் ரோட்டை மறித்தே
நிறுத்தப்படுகின்றன. குறுகலான இடத்தில் வாகனங்களை இஷ்டத்துக்கு நிறுத்துவதால்,
பின்னால் வரும் வாகனங்கள் செல்ல வழியின்றி தேக்கம் அடைகின்றன; இதனால்,
போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாகனங்களை முந்திச் செல்வதற்காக 'ஹாரனை' அலற
விடுகின் றனர். வாகன இரைச்சல், 'ஹாரன்' சத்தங்களால் மருத்துவமனையில்
சிகிச்சை பெறும் நோயாளிகள், முதியோர் பதற்றம் அடைகின்றனர். நோயாளிகள்
அதிகம் வந்து செல்லும் திருப்பூர் அரசு மருத்துவமனை பகுதியில் வேகம் அளவு
குறித்தும், 'மருத்துவமனை பகுதி; ஒலி எழுப்பாதே' என்றும் போர்டுகள் வைக்க
வேண்டும். வேகத்தை கட்டுப்படுத்த மருத்துவமனை முன்பகுதியில் வேகத்தடை
அமைக்க வேண்டும்.