| ADDED : மார் 27, 2024 12:05 AM
பல்லடம்:பல்லடம் அருகே, விலைக்கு வாங்கப்படும் குடிநீரை, லாரி மூலம் மூன்றாவது மாடிக்கு ஏற்றி பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டு வருகிறது.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 3 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும், 20 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. அவ்வாறு வரும்போது குடிநீரை டிரம்களில் பிடித்து வைத்து பயன்படுத்துகிறோம். மேலும், பற்றாக்குறைக்காக, லாரி தண்ணீர் வாங்கி மோட்டார் மூலம் மூன்று மாடிகளில் உள்ள குடியிருப்பினரும் பிரித்து பயன்படுத்துகிறோம்.வெயில் காலம் என்பதால் கூடுதல் தண்ணீர் செலவாகிறது. குடியிருப்புக்கு மேல் உள்ள வாட்டர் டேங்குகளை சமூக விரோதிகள் சேதப்படுத்துவதால் தண்ணீரை தேக்கி வைக்கவும் வழியில்லை. இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் விவசாயக் கூலி, பனியன் தொழிலாளர், நுாறு நாள் பணிக்கு செல்கிறோம். குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்தி வரும் நாங்கள் தண்ணீருக்கு கூடுதல் செலவு செய்வது, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி நிர்வாகம், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடமும் தெரிவித்தும் பயனில்லை. எனவே, குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.