திருப்பூர் : திருப்பூரில் உள்ள சமுதாய அவலங்களை சுட்டிக்காட்டி, போலீசாருக்கு மாணவ, மாணவியர் 'போஸ்ட் கார்டு' அனுப்பி வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட போலீசார் மூலம் இதுவரை 20,000 'போஸ்ட் கார்டுகள்' வழங்கப்பட்டுள்ளன. 'காவல் பணியில் மாணவர்களின் பங்கும், தகவலும்' என்ற திட்டத்தில் போஸ்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், எஸ்.பி., அலுவலக முகவரி அச்சிடப்பட்டுள்ளது. சமுதாய குற்றங்களை, தவறுகளை, முறைகேடுகளை போஸ்ட் கார்டுகளில் எழுதி அனுப்ப, மாணவ மாணவியருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை, 200க்கும் மேற்பட்ட போஸ்ட் கார்டுகள் எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்துள்ளன. அதில், பல்வேறு குற்றங்கள் குறித்த விவரங்களை, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சீட்டாட்டம், சூதாட்டம்,'ஓவர் ஸ்பீடு' வாகனங்கள், 'குடி'மகன்கள் தொல்லை, படிக்க தொல்லையாக அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடுபவர்கள், குடும்ப சண்டை உள்ளிட்ட பல பிரச்னைகளை, போலீசாரின் கவனத்துக்கு தெரிவித்துள்ளனர்.எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மாணவ, மாணவியர் கூறும் புகார்களை, பிரச்னைகளை தெரிந்து கொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அதிக ஆர்வம் காட்டுவது இல்லை; போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்போது நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில், மாணவ மாணவியர் சமுதாய பொறுப்புடன், புகார்களை தெரிவித்து வருகின்றனர். அப்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.