உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி நிலங்கள் அபகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி நிலங்கள் அபகரிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என, எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனுக்கள் குவிந்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை 97 மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இவ்வழக்குகளில் பெரும்பாலும் புகார் கொடுத்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததால், மனுதாரர்களுக்கு சாதகமாகவே முடிவு காணப்பட்டது. புகார் அடிப்படையில், 81 கோடி ரூபாய் மதிப்புள்ள 363.56 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டும், மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது. போலீஸ் விசாரணை அடிப்படையில், நில மோசடி தொடர்பாக மாவட்டத்தில் 160 பேர் மீது 40 வழக்குகள் பதிவானது; இதனடிப்படையில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 58.87 கோடி ரூபாய் மதிப்புள்ள 188.22 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் நில மோசடி தொடர்பாக மொத்தம் 137 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 137.87 கோடி ரூபாய் மதிப்புள்ள 551.78 ஏக்கர் நிலங்களை, நில உரிமையாளர்களை மிரட்டியும், போலி ஆவணங்கள் மூலமும் அபகரித்துள்ளனர். இதில் 50 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆள் பலத்தை கொண்டு நில உரிமையாளர்களை மிரட்டி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில வழக்குகள், கந்து வட்டி மற்றும் நிலத்தின் மீது கடன் வாங்கும் போதே எதிரடி கிரையம் மற்றும் 'பவர்' எழுதி வாங்குதல் முறையில் நில உரிமையாளர்களிடம் எழுதி வாங்கி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். இவ்வாறு உள்ள சொத்துக்களில் முறையாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கந்து வட்டி காரணமாக குறைந்த விலைக்கு அபகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகள் முறையாக கடன் திருப்பி செலுத்தப்பட்டிருந்தாலும் மிரட்டி எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் மீது நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை செய்தபோது மிரட்டியும், மோசடி செய்தும் நிலங்கள் அபகரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

மொத்தம் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அபகரிப்பு நடந்துள்ளது. ஒரு சில வழக்குகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு,போலீசார் விசாரணை துவங்கிய உடனேயே நிலத்தை அபகரித்தவர்கள் தாங்களாகவே முன் வந்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மோசடி குறித்த வழக்குகளில் , அண்ணன் , தம்பி மற்றும் உறவினர்கள் சொத்து தகராறு குறித்து விசாரிக்கப்படுவதில்லை. இதில், மிரட்டல், அரசியல் செல்வாக்கு புகுந்திருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும். நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு எஸ்.பி., தெரிவித்தார்.

சிறப்பு பிரிவு அதிகாரிகள் நியமனம் : திருப்பூர் மாவட்ட நில மோசடி சிறப்பு பிரிவு கடந்த 28ம் தேதி முதல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு அதிகாரிகளை கொண்டு எஸ்.பி., அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது. கோவை ஐ.ஜி., உத்தரவின்படி சிறப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில், மாவட்ட குற்றப்பதிவேடு டி.எஸ்.பி., கவுதமன் மேற்பார்வையில் ஆறு சப்-டிவிஷனுக்கும் தனித்தனி விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ரூரல் இன்ஸ்பெக்டர் வெற்றி வேந்தன் தலைமையில், திருப்பூர் சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ., தென்னரசு, சிறப்பு எஸ்.ஐ., பொன்னுசாமி, போலீஸ் செல்வமணி; அவினாசி சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ., நிர்மலா, சிறப்பு எஸ்.ஐ., இந்திராகாந்தி, ஏட்டு கோவிந்தராஜ்; பல்லடம் சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ.,ராஜசேகர், எஸ்.எஸ்.ஐ., சிவசுப்ரமணியம், ஏட்டு வைரமணி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், உடுமலை சப்-டிவிஷனுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, லிங்குசாமி, ஏட்டு முத்துராமலிங்கம்; தாராபுரம் சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ., ஆனந்த், சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன், ஏட்டு காளிரத்தினம்; காங்கயம் சப்-டிவிஷனுக்கு எஸ்.ஐ.,ஜான், சிறப்பு எஸ்.ஐ., பிரபாகரமணி, ஏட்டு மணிவாசகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி