உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முறைகேடாக நடத்தப்படும் "பார்களால் அரசுக்கு வருவாய் இழப்பு :அதிரடி நடவடிக்கைக்காக முதல்வருக்கு மனு

முறைகேடாக நடத்தப்படும் "பார்களால் அரசுக்கு வருவாய் இழப்பு :அதிரடி நடவடிக்கைக்காக முதல்வருக்கு மனு

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ஏலம் எடுக்காமல் முறைகேடாக 'பார்'கள் அதிகளவு நடத்தப்படுகின்றன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுவதாக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தமிழக அரசின் 35 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மதுக்கடைகளில் 'பார்' நடத்தும் உரிமம் ஏலம் விடப்படுகிறது. இதனால், மாதம்தோறும் கணிசமான வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது.கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பார் நடத்தும் உரிமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. பல பார்கள் ஏலம் எடுக்கப்படாமல் உள்ளூர் போலீசார் ஆசியுடன் தி.மு.க., பிரமுகர்களால் நடத்தப்பட்டு வந்தன. இந்த 'பார்'களில் பிரச்னைகள் தொடர்கதையாக இருந்தன.அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் டாஸ்மாக் மதுக்கடை பார் ஏலத்தில் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, வருவாய் இழப்பு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திருப்பூரில் உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்காக பார் நடத்த ஏலம் விடப்பட்டது.இதில், அ.தி.மு.க., பிரமுகர்கள் அதிகளவு பங்கேற்று பார்களை ஏலம் எடுத்தனர். உடுமலை நகரத்திலுள்ள அனைத்து பார்களும் முறையாக ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால், புறநகர் பகுதியிலுள்ள 11 பார்கள் ஏலம் எடுக்கப்படாமல் இருக்க கட்சி பிரமுகர்கள் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டனர்.இவ்வாறு, கரட்டுமடம் டாஸ்மாக் கடை எண் 2335, ஜல்லிபட்டி (எண். 1949), குறிச்சிக்கோட்டை (எண் 2332), எலையமுத்தூர் (2327), மடத்துக்குளம், கொழுமம் (2030), காரத்தொழுவு (2331), பூளவாடி (2336), கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி-1, பெரியபட்டி ஆகிய டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான பார்கள் ஏலம் எடுக்கப்படாமல் இருக்க மறைமுகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த பார்கள் ஏலம் விடப்படாத நிலையில், முறைகேடாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெறப்படும் வருவாய், கட்சி பிரமுகர்களுக்கு ஆதாயமாகவும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு முறைகேடாக நடத்தப்படும் பார்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்,'உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் முறைகேடாக நடத்தப்படும் பார்களால் கிராமங்களில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இந்த பார்கள் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில் ஆதாயம் பார்த்து வந்த தி.மு.க., வினர் லாபம் பார்த்து வருகின்றனர்.டாஸ்மாக் மண்டல அலுவலகம் மூலம் முறையாக ஆய்வு நடத்தி ஏலம் விடப்படாத பார்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பும் 'குடிமகன்'கள் உடுமலை, மடத்துக்குளத்தில் இயங்கி வரும் அனைத்து 'பார்'களிலும் உணவு பண்டங்கள் அனைத்தும் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. 50 பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் டம்ளர் நான்கு ரூபாய்க்கும், ஒரு ரூபாய் விலையுள்ள தண்ணீர் பாக்கெட் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மூன்று மடங்கிற்கும் அதிகமாக பார்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் குடிமகன்கள் புலம்பி வருகின்றனர். உடுமலையில் திடீர் வாகன சோதனை:124 வாகனங்களுக்கு அபராதம்உடுமலை : உடுமலை போக்குவரத்து துறை பகுதி அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட திடீர் வாகன ஆய்வில், 124 வாகனங்களுக்கு 71 ஆயிரத்து 305 ரூபாய் வரி மற்றும் அபராதமாக விதிக்கப்பட்டது. கோவை துணை போக்குவரத்து ஆணையர் உத்தரவு அடிப்படையில், உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் உலகநாதன் மற்றும் கோவிந்தராஜ் அடங்கிய குழுவினர் உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் திடீர் வாகன சோதனை நடத்தினர். 1,124 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 124 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி வரி மற்றும் அபராதமாக 71 ஆயிரத்து 305 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இணக்க கட்டணமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 400 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. 13 வாகனங்கள் தகுதி சான்று, காப்பு சான்று, ஒட்டுநர் உரிமம் இல்லாமலும் வரி கட்டாத குற்றத்திற்காகவும் பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழப்பு ஏற்படுத்திய 13 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் பறிமுதல் செய்து ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில் அனுமதிக்கு புறம்பாக அதிக நபர்களை அபாயகரமாக ஏற்றி இயக்கப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த மூன்று சுற்றுலா ஜீப்கள்(கே.எல்06 பி 9104, கேஎல் 06 ஈ 3665, கேஎல் 06 டி 1799) பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற தணிக்கை உடுமலை பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் உலகநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை