திருப்பூர்;பல்லடம் தாலுகா, கரடிவாவியில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், 1,010 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 2015ம் ஆண்டு முதல், மரக்கன்று நட்டு வளர்க்கும் சேவைப்பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவில் உள்ள, இளம் பசுமை அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரே திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. விவசாய நிலம், கோவில் நிலம், தரிசு நிலங்கள், நிறுவன வளாகத்தில் உள்ள நிலத்தில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.தண்ணீர் வசதியுள்ள நிலம் இருந்தால், சொட்டு நீர் பாசனம் அமைத்து, மரக்கன்று நட்டு வளர்க்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இலவசமாக மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய, 10 வது திட்டம், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் பயணித்துக்கொண்டிருக்கிறது.இந்நிலையில், பல்லடம் தாலுகா, புளியம்பட்டி அடுத்துள்ள கரடிவாவியிலுள்ள புல்லா கவுண்டர் தோட்டத்தில் நேற்று, மரக்கன்று நடப்பட்டது. நில உரிமையாளர் குடும்பத்தினர் கோவிந்தராஜ்,- - சிவகலா, கவிதா; சண்முகம், தெய்வமணி; சஷ்டி கணபதி, நித்யா, சூர்யதர்ஷன்; சிவக்குமார் , கன்னிகாபரமேஸ்வரி, சுதர்சன், மகிழ் அவிநவ் ஆகியோர் மரக்கன்று நட்டு வைத்து, நடவு பணியை துவக்கி வைத்தனர். மகாகனி -600, தேக்கு -400, பலா 110 என, 1,010 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அழைப்பு விடுத்துள்ளனர்.