உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமை போர்வைக்கு வித்திட 12 வாய்ப்புகள்!

பசுமை போர்வைக்கு வித்திட 12 வாய்ப்புகள்!

திருப்பூரின் வெப்பநிலை அனல் கக்குகிறது. தொடர்ந்து 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது. புவி வெப்பமயமாதலுக்கு காரணம், கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளதுதான். புதைபடிம எரிபொருட்கள் கட்டுப்பாடற்ற பயன்பாடு; காடழிப்பு போன்றவை, இதற்கு முக்கியக் காரணம். மனித குலம் நினைத்தால் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே. இதற்கு திருப்பூர் முன்னுதாரணமாக திகழ்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

சூரியசக்தி, காற்று, நீர் ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களே, புதுப்பிக்கப்பட்ட மற்றும் மரபுசாரா எரிசக்தி. திருப்பூர் பின்னலாடைத்துறையினர் சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றனர்; 'வளம் குன்றா வளர்ச்சி' என்பதைத் தாரக மந்திரமாக மாற்றியிருக்கின்றனர்.

சிறக்கும் பல்லுயிர்ச்சூழல்

மாற்றம் அடைந்துவிட்ட, மாற்றம் அடையப் போகிற ஒரு சுற்றுச்சூழலில் தொடர்ந்து வாழ்வதற்காக உயிரினங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள் முக்கியமானவை. புவி வெப்பமடைதல், அதன் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றம், அழிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன. திருப்பூரில் உள்ள நஞ்சராயன்குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நம் தேசப்பறவைகள் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பறவைகளையும் தன்வசப்படுத்துகிறது இக்குளம்; பல்லுயிர்ச்சூழலை வளர்க்கிறது.

மூன்று 'ஆர்'கள் முக்கியம்

நுகர்வுக் கலாசாரத்துக்கு பலரும் அடிமைகளாக இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கி, மறுபடி பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமாகச் செயல்படுவதன் மூலம் புவி வெப்பமடைவதையும், பருவநிலை மாற்றத்தையும் குறைக்க முடியும். மறுசுழற்சி, மறுபயன்பாடு, குறைந்த பயன்பாடு (Recycle, Reuse, Reduce) ஆகியன முக்கிய அம்சங்கள்; திருப்பூர் தொழில்துறை இதைப் பின்பற்றுகிறது.

'18 லட்சம் மரங்கள்' சாதனை

''புவி வெப்பமடைவதை குறைக்க, அதிக அளவு மரம் வளர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 2015 முதல், 2023 வரை, 18 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறோம்; 85 சதவீத கன்றுகள், மரமாக வளர்ந்துள்ளன; 10வது திட்டத்துக்காக, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் தயார்நிலையில் உள்ளன. இளம் பசுமை அமைப்புகளை ஒருங்கிணைத்து, தொழில்துறையினர் பங்களிப்புடன் இலவசமாக மரக்கன்று நட்டு கொடுக்கிறோம். மரம் வளர்ப்பின் மூலமாக, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பல்லுயிர் சுழற்சி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன''இவ்வாறு சொல்கிறார், 'வெற்றி - வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பின் தலைவர் சிவராம்.

'இசை'வான மூங்கில் பூங்கா

மூங்கில் தோப்பு, மரங்களுக்கு நிகரான ஆக்சிஜனை விட 35 சதவீதம் அதிகளவு ஆக்சிஜனை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மூங்கில் வளர்ப்பு கார்பன் தடம் குறைக்கவும், புவி வெப்பமடைதலை மாயமாக்கவும் உதவும். கோவை வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து வெற்றி நிறுவனம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூர் அடுத்த இடுவம்பாளையம், சின்னக்காளிபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் பூங்காவை அமைத்துள்ளது. கோடை விடுமுறைக்காலத்தில் இது மாணவ, மாணவியரின் ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

திசைமாறிய பருவம்

''பருவங்கள் திசை மாறி விட்டது. என்னது பருவங்கள் எப்பவாவது திசை மாறுமான்னு கேட்பீங்க. இல்லைங்க, அது கால நிலை மாற்றம்ன்னாங்க. காலம் எப்படிங்க மாறும்ன்னு கேட்டீங்க. இல்லீங்க இது கால நிலை பிறழ்வுன்னாங்க. இது மக்களுக்குப் புரியலை. இந்தப் பூமி சூடாயிருச்சுன்னு சொன்னோம். வெயில் அடிச்சா பூமி சூடாகத்தான் செய்யும்ன்னு சிரிச்சாங்க. இப்பவும் மக்கள் அதை நம்பலை. இப்ப சூடாவதற்கான இயல்புன்னு ஒண்ணு இல்லாமப் போயிடுச்சு.இந்தப் பூமி எப்படி சூடாச்சுன்னா இந்தப்புகைகள், வாகனப்புகைகள், தொழிற்சாலைப் புகைகள் மூலம் எல்லாம் தேவைக்கு அதிகமான கரியமிலவாயுவை ஏற்றினோம். உலகம் பெரிசா விரிவடைஞ்சுடுச்சு. இந்தக் கரியமில வாயுவை கழிச்சுக்கட்டற அளவுக்கு நம்மகிட்ட தாவரப்பரப்பு இல்லை....''வேதனைகளின் ரணத்தை மற்றவருக்கும் புரியும்படி எளிதாகச் சொல்கிறார் ஒரு நேர்முகத்தில் எழுத்தாளர் கோவை சதாசிவம். இதோ, திருப்பூரில் மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டத் துவங்கீட்டோமே!

பல்லுயிர் ஓம்புதல்

''அழகான காடு. வியாபாரத்திற்குச் சென்ற தலைவன் தலைவியைக் காண அழகிய மணிகள் உள்ள தேரில் விரைந்து வருகிறான். வரும் வழியில் தேனை உறிஞ்சி உணவு உண்ண தேன் சிட்டுகள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. தலைவனின் தேரின் மணிகள் எழுப்பும் சப்தம் இரைச்சலாகி விடுகிறது. அதைக் கேட்டு பறவைகள் சிதறுகின்றன. தேனீக்கள் சிதறுகின்றன. தலைவன் தன் தேரோட்டியிடம் மணிகளின் நாக்குகளை எடுத்து விடும் படி செய்கிறான். அவனின் விரைந்த பயணம் தொடர்கிறது.இக்காட்சி, அகநானுாற்றுப் பாடல் ஒன்றில் இடம் பெற்றிருக்கிறது. தேன் சிட்டுகளுக்குக் கூட துன்பம் தரக்கூடாது என்கிறது இப்பாடல். இயற்கையை நேசிப்பதும், அதனுடன் இயல்பாக உறவாடுவதும் நல்ல வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்று நமது இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' பற்றி வள்ளுவரும் சொல்லி அறமாக்கியுள்ளார்''பத்தாண்டுகள் முன்பே எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நினைவூட்டிய 'சூழல் அறம்' சார்ந்த வரிகள் இவை.

சிந்தையில் கொள்வோம்

''என் வீட்டில் பெரிதாய் இரு மாமரங்கள், இரு தென்னை மரங்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வெந்து தணிகிறது. நான் மட்டும் மரங்களை வளர்த்து என்ன பயன்? சுற்றிலும் உள்ள வீடுகளில் மருந்துக்குக் கூட மண்தரை இல்லை. ஆயிரம் வீடுகட்கு ஐம்பது மரங்கள் என்ற அளவில்கூட இல்லை. வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது.எண்ணிப் பாருங்கள், நுாற்றிரண்டு பாகை வெப்பநிலையில் காய்ச்சல் என்றாலே நம் உடல் எப்படிக் கொதிக்கிறது! நம்மைச் சுற்றி நுாற்றுப் பதினைந்து பாகை வெப்பம் நிலவுகிறது. வீட்டின் வெளிச்சுவரை உட்புறம் தொட்டுப் பார்த்தால் அதுவே தகதகவென்று கொதிக்கிறது. இது முற்றிலும் கொடியது...'' என்று சமூக வலைதளப் பக்கத்தில், கவிஞர் மகுடேசுவரனின் வேதனை வெந்து தணியாததாக தொடர்கிறது. சிந்திக்க வேண்டிய கருத்து.

ஏற்புடைய யோசனை

''அரசுகள் எதனைத்தான் செய்கின்றன ! நம்மை ஆள்பவர்கட்குச் சுற்றுச்சூழல் நுண்ணுணர்ச்சி உண்டா? இந்நேரம் விரைந்து நின்று பலப்பல காப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டாவா? ஐயோ, இதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் தரப்பு மண்டையை உலுக்கிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ! மக்களாகிய நாம்தான் இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள்'' என்று மகுடேசுவரன் சொல்லும் யோசனை அனைவருக்கும் ஏற்புடையதுதானே!

பேராற்றலும், ஆசையும்

''மனிதனின் பேராற்றலும், பிறவற்றைக் கட்டுப்படுத்தும் ஆசையும் காடு, மலை, கடல், மணல் என்று எல்லாவற்றையும் சீரழிக்கிறது. உலகில் எல்லாவகை உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. ஒவ்வொரு உயிரினமும் தனக்கானப் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு பாக்டீரியா கூட தான் சார்ந்து வேறொரு நுண்ணுயிர்க்கு உணவையும் பாதுகாப்பையும் தரக்கூடியது. அனைத்து உயிர்களும் வாழ எதிர் நோக்கும் அறத்தைக் கொல்லுவதை காடுகளை அழிப்பது, ஆறுகளை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழலைக் கெடுப்பதன் மூலம் மனிதன் செய்கிறான்'' என்ற வேதனையை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்துகிறார். எழுத்தாளரின் கவலையைப் போக்க களம் காணத் துவங்கிவிட்டோமே!

கோடை மழை பொழியுமா?

இந்தாண்டு, ஜன., மாதம் மட்டும் ஒரு சில நாட்கள் மழை பெய்தது; பிப்., மாதம் துவங்கி ஏப்., மாதம் வரை, ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. கடந்த ஜன. மாதம், வெள்ளகோவிலில், 40 மி.மீ., - தாராபுரத்தில், 38 மி.மீ., - பல்லடத்தில், 29 மி.மீ., - ஊத்துக்குளியில், 14 மி.மீ., - மூலனுாரில், 31 மி.மீ., - மடத்துக்குளம் -47 மி.மீ., - அவிநாசியில், 20 மி.மீ., - திருப்பூர் வடக்கில், 12 மி.மீ., - திருப்பூர் தெற்கில், 11 மி.மீ., - காங்கயத்தில், 9 மி.மீ., அளவுக்கு மழை பெய்திருந்தது.இருப்பினும், குளிர் பருவத்தில் பெய்ய வேண்டிய மழையே, மாவட்டத்துக்கு கிடைக்கவில்லை. கோடை மழையும் தலைகாட்டவே இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் வாட்டியெடுப்பதால், புற்கள் காய்ந்து, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாத பரிதாபம் ஏற்பட்டுள்ளது.திடீரென நேற்று முன்தினம் மாலையில் மழை தலைகாட்டியது. அவிநாசி சுற்றுப்பகுதிகளில் லேசாக தலைகாட்டியது; இருப்பினும் மழை பதிவாகவில்லை. காங்கயம் தாலுகா பகுதியில் மட்டும், 3 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.அக்னிநட்சத்திர வெயில் துவங்கியிருப்பதால், கோடை மழை பொழிய வாய்ப்புள்ளது. நேற்று முன்தினம் தலைகாட்டிய மழை, தொடர்ந்து கருணை காட்டினால், கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து அனைவரும் தப்பிக்க முடியும் என, மழையை எதிர்பார்த்து விவசாயிகளும் காத்திருக்கின்றனர்.

வற்றாத நீர் வளம்

குளங்களைத் துார்வாரினால் நிலத்தடி நீர் மட்டம் கோடையிலும் வற்றாது. சூழலையே குளுமைப்படுத்தும். சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் இதற்கு முன்னுதாராணமாய்த் திகழ்கின்றன. ஆண்டிபாளையம் குளத்தில் எப்போதும் தண்ணீர் ததும்பும். தற்போது, அடிக்கிற வெயிலில் நீர்மட்டம் சரிவை நோக்குகிறது. தண்ணீரைத் தேக்கிவைத்து, நிலத்தடி நீர் மட்டம் காத்து, நீர்ப்பஞ்சம் உருவாகாமல் காக்கின்றன நொய்யல் குளங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை