| ADDED : மே 04, 2024 11:24 PM
அவிநாசி:அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை ஒட்டி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் உள்ளனர்.துலுக்கமுத்துார், சேவூர், தண்டுக்காரன்பாளையம், தெக்கலுார், கருவலுார் என ஆங்காங்கே கால்நடை மருத்துவமனைகள் மற்றும் பகுதி நேர மருத்துவமனைகள் உள்ளதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை சிகிச்சைக்காக அழைத்துச் சென்று பயன்பெறுகின்றனர்.அவிநாசியை அடுத்துள்ள பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் அவிநாசி கால்நடை மருத்துவமனையையே நம்பியே உள்ளனர். தற்போது அவிநாசி கால்நடை மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர் மணிவண்ணன் விடுமுறையில் சென்றுள்ளதால் மொண்டிபாளையம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் கூடுதல் பொறுப்பாக அவிநாசி மருத்துவமனைக்கும் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து செல்கிறார்.சேவூர் கால்நடை மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர் உடல் நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் உள்ளதால் மூன்று மருத்துவமனைகளுக்கும் ஒரே மருத்துவர் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு வரும்போது காலை 11:00 மணி ஆகிறது.விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை வெயில் நேரத்தில் கூட்டி வர முடிவதில்லை என கூறுகின்றனர். அவிநாசிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து மாற்று மருத்துவர் ஏற்பாடு செய்து காலை 7:00 மணி முதல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கால்நடை மருத்துவர் கார்த்திக் கூறுகையில், ''மொண்டிபாளையத்தில், பணியை முடித்து சேவூர் கால்நடை மருத்துவமனைக்கு வந்து அங்குள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து விட்டு அதன்பின், அவிநாசி வர வேண்டி உள்ளது. மேலும், காலை 7:00 மணி முதலே சி.பி.ஆர். எனப்படும் தடுப்பூசி செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு போடப்பட்டு வருகிறது. ஓரிரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.