| ADDED : ஜூலை 09, 2024 10:49 PM
பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், பெருந்தொழுவு - கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தின் அசல் பத்திரத்தை கணேஷ் என்பவரிடம் பத்து லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். நடராஜூக்கு தெரியாமல், கணேஷ் பல்லடத்தைச் சேர்ந்த முருகையன் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்து விட்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக, ஏப்., மாதம் நடராஜனை, முருகையன் மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல், ஆயுதத்தால் தாக்கி சென்னிமலைக்கு காரில் தூக்கிச் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்தனர். அதன்பின் அவர் அங்கிருந்து தப்பி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஈரோடு ரங்கபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ராஜ்குமார், 27, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சூரம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை மகன் ராகவன், 26 அதே பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகன் சுதர்சன், 22 ஆகியோரை கைது செய்தனர்.