உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்கல்வி படிக்கும் 86 சதவீத மாணவர்கள்

உயர்கல்வி படிக்கும் 86 சதவீத மாணவர்கள்

திருப்பூர் : 'திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையில், 86 சதவீதம் எட்டப்பட்டுள்ளது' என, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், பிஷப் உப காரசாமி மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 பொது தேர்வில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம், முதலிடம் பெற்றது. 10 மற்றும், 12ம் வகுப்பு பொது தேர்வில், தோல்வியடையும் மாணவர்கள், மனம் தளராமல், அடுத்த இரு மாதத்தில் வரும் துணை தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள், கட்டாயம் கல்லுாரி படிப்பு கற்க வேண்டும். உயர்கல்விக்கான வழிகாட்டி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களில், உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை, 86 சதவீதமாக உள்ளது; இது, 95 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பதே நம் இலக்கு'' என்றார்.மேயர் தினேஷ்குமார் பேசுகையில், ''மாநில அரசு கல்வி, சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம், கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. அரசு வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி, மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும்,'' என்றார்.அமைச்சர் சாமிநாதன், மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசுகையில், ''மாநில அளவில் திருப்பூர் மாவட்டம், கல்வியில் சிறந்து விளங்குகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 7.40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள, 15 ஆயிரத்து 364 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக மூன்று பள்ளிகளை சேர்ந்த, 847 மாணவ, மாணவியருக்கு, 41.02 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் பீட்டர் மரியதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் மரியஜோசப் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ