உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ட்ராங் ரூம் பகுதியில் கூடுதல் சிசிடிவி

ஸ்ட்ராங் ரூம் பகுதியில் கூடுதல் சிசிடிவி

திருப்பூர்;எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களில், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை என ஆறு சட்டசபை தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், தனித்தனி 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டுள்ளன. அந்தியூர், கோபி தொகுதிகளில் ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் மட்டும், கூடுதலாக தலா ஒரு 'ஸ்ட்ராங் ரூம்' அமைத்து, வைக்கப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எட்டு ஸ்ட்ராங் ரூம்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அரங்குகள் உள்பட ஓட்டு எண்ணிக்கை மையம் முழுவதும் போலீஸ், துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.மொத்தம், 260 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, முழு நேரமும் கண்காணிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, கோபி, அந்தியூர் தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூம்களில் பொருதப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களில் பழுது ஏற்பட்டு, நள்ளிரவில், 20 நிமிடம் வரை பதிவுகள் நின்று விட்டன.நீலகிரி உள்பட வேறு சில மாவட்டங்களிலும், ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 'சிசிடிவி' கேமரா பழுது ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி, அனைத்து ஓட்டு எண்ணிக்கை மைய ஸ்ட்ராங் ரூம்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், ஆறு சட்ட சபை தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எட்டு 'ஸ்ட்ராங் ரூம்'களிலும், நேற்று, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். புதிதாக பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட வசதியாக, கட்டுப்பாட்டு அறையில் கூடுதல், 'டிவி' வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை