திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, ''ஆன்லைன் கட்டட அனுமதிக்கான, 268 வது தீர்மானம் குறித்து பேசினார். அதில், கட்டட அனுமதிக்கு, சதுர அடிக்கு, 35 ஆக இருந்த கட்டணத்தை, 88 ரூபாயாக உயர்த்தி, 125 சதவீதம் உயர்த்தி மக்களுக்கு சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே, குடிநீர், சொத்து, பாதாள சாக்கடை வரி என, பல வரி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, இது மறைமுக கொள்ளையாக, தெரிகிறது. இதனால், மக்களுக்கு மேலும் சுமை தான். எனவே, தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார். ஆனால், மேயர் மறுத்தார். இதனால், அவரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, பா.ஜ., கவுன்சிலர் குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு தமிழகத்தில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து பேச முயன்றார். ஆனால், குறுக்கிட்ட மேயர் தினேஷ்குமார், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக கூறி, தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.தொடர்ந்து, பா.ஜ., கவுன்சிலரை பேச விடாமல், தி.மு.க., - கம்யூ., கவுன்சிலர்கள் கூச்சலிட்டபடி, மேஜையை தட்டி தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனால், பா.ஜ., கவுன்சிலர்கள் தங்கராஜ், குணசேகரன் ஆகிய இருவரும் வெளிநடப்பு செய்தனர்.