உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவுச்சங்கிலியுடன் உன்னத வேளாண்மை

உணவுச்சங்கிலியுடன் உன்னத வேளாண்மை

நிலத்தடியில் வாழும் புழு, பூச்சிகளை 'உழவ னின் நண்பர்'கள் என்பார்கள். மண்ணுக்கு நல்லது செய்யும் பணியை அவை செய்வது தான், அதற்கு காரணம். அந்த வரிசையில், சில பறவையினங்களும், உழவனுக்கு தோழனாக இருக்கிறது, என்பதை விளை நிலங்களில் உழவுப்பணி நடக்கும் போது பார்க்க முடியும்.கோடை மழையால் நனைந்த விளை நிலங்களில், உழவுப்பணியை துவக்கி, சாகுபடிக்கு தயார்படுத்த துவங்கியிருக்கின்றனர் விவசாயிகள். விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால், பல இடங்களில் டிராக்டர்களின் உதவியுடன் உழவு செய்து வருகின்றனர்.'மிரட்டும்' டிராக்டர் சக்கரங்களை கண்டு மிரண்டு ஓடாமல், அதை விரட்டி செல்லும் கொக்கு, நாரை, மைனா உள்ளிட்ட பறவைகளை, விவசாய நிலங்களில் பார்க்க முடிகிறது.

'அவற்றால் என்ன பயன்?'

சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம், நம்மிடம் பகிர்ந்தது:மண்ணடி, அதாவது, மண்ணின் அடிப்பரப்பு என்பது, மிக முக்கியமான உயிர்ச்சூழல் மண்டலம். மண்ணின் ஈரப்பதம் சார்ந்து, 100க்கும் மேற்பட்ட சிறு, சிறு உயிரினங்கள்; மண்புழு, புள்ளப்பூச்சி, பூரான், தேள் உள்ளிட்டவை வாழ்கின்றன. மண்ணை கிளறும் போது, அவை வெளியில் வருவது இயல்பு; அவற்றை பிடித்து உண்பதற்காக தான் கொக்கு, நாரை, மைனா உள்ளிட்ட பூச்சியுண்ணும் பறவைகள், உழவனின் பின்னே செல்கின்றன.இதனால், உழவுக்கு பின், மண்ணில் விதைக்கப்படும் விதைகள், புழு, பூச்சிகளால் சிதைக்கப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது; முளைப்புத்திறன் பாதுகாக்கப்படுகிறது. உணவுச் சங்கிலியில் இது முக்கியமான அம்சம்.அதோடு, பயிர்களை விளைவித்து, மக்களுக்கு உணவு வழங்குவதற்கு முன், பூச்சி, பறவையினங்களுக்கு, விவசாயிகள் இரை வழங்கி விடுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை