உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக்னி நட்சத்திர வெயில் துவக்கம் :சிவாலயத்தில் ஜல அபிஷேகம்

அக்னி நட்சத்திர வெயில் துவக்கம் :சிவாலயத்தில் ஜல அபிஷேகம்

திருப்பூர்;அக்னி நட்சத்திர வெயில் துவங்கியதால், சிவாலயங்களில், தாராபாத்திரம் பொருத்தி, நேற்று முதல் மூலவருக்கு ஜல அபிஷேகம் துவங்கியுள்ளது.அக்னி சொரூபமாக விளங்கும் சிவபெருமானுக்கு, அபிஷேகம் செய்வதன் வாயிலாக, மனம் குளிர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரையின் கடைசி இருவாரமும், வைகாசியின் முதல் இருவாரங்கள் அடங்கிய, 24 நாட்கள் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.கோடை காலத்தில் வெயில் இருந்தாலும், இந்நாட்களில் வெப்பத்தாக்கம் அதிகம் இருக்கும். அதன்படி, வெப்பத்தை தணிக்கும் வகையிலான பரிகார பூஜைகளும் கூட சில கோவில்களில் நடத்தப்படுவது வழக்கம்.அக்னி நட்சத்திர காலத்தில், சிவாலயங்களில் உள்ள மூலவர் லிங்கத்திருமேனி அதிகமாக வெப்பமடையும். கருவறை லிங்கத்தை குளிர்விக்கும் வகையில், தாராபாத்திரம் வாயிலாக ஜல அபிஷேகம் நடத்தப்படுகிறது. அக்னி நட்சத்திர துவக்கமான நேற்று, சிவாலயங்களில், மூலவருக்கு மேல், செம்பு உலோகத்தில் செய்த தாராபாத்திரம் பொருத்தப்பட்டது. வெட்டிவேர், பன்னீர், வில்வ இலை உள்ளிட்ட வாசனை திரவியங்களை தீர்த்தத்துடன் கலந்து, அதில் ஊற்றி வைக்கப்பட்டுள்ளது. சிறு துவாரத்தின் வழியாக, லிங்கத் திருமேனி மீது, சொட்டு சொட்டாக தீர்த்தம் விழும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஜல அபிஷேகம் செய்வதன் மூலமாக, வெப்ப தாக்கத்தில் இருந்து உலகம் குளிர்விக்கப்படும் என்ற நம்பிக்கை இன்றும் பின்பற்றப்படுகிறது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் என, அனைத்து சிவாலயங்களிலும், லிங்கத்திருமேனி மீது வரும் 28ம் தேதி வரை ஜல அபிஷேகம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை