திருப்பூர்;ஆடி மாத கடைசி (ஐந்தாவது) வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் பகுதி அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.ஐந்தாவது வெள்ளிக்கிழமையான நேற்று திருப்பூர், அவிநாசி, பல்லடம், மங்கலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், மஞ்சள் நீர் அபிேஷகம், அலங்காரம் மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம், திருவிளக்கு பூஜைகள் விமரிசையாக நடந்தன.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், விசாலாட்சி அம்மனுக்கு அதிகாலையில், அபிேஷக பூஜை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார். உற்சவருக்கு, காலை, 11:00 மணிக்கு கலச அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது; மாலை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டாள் நாச்சியாருக்கு, 1008 தீபம் ஏற்றி வைத்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பலவகை அலங்காரங்கள்
நல்லுாரில் உள்ள சோளியம்மன், கருவம்பாளையம் மாகாளியம்மன், கோட்டை மாரியம்மன், பிச்சம்பாளையம் மாரியம்மன், கஞ்சம்பாளையம் மகாமாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் என, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.என்.ஆர்.கே., புரம், 2வது வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு, குளிர்பான பாட்டில்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கோவில்களில், அம்மனுக்கு, வேப்பிலை மாலை, தாமரை மாலை, கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.ஐந்தாவது வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி விரதம் இருந்த பெண்களுக்கு, மல்லிகை பூ, மஞ்சள் சரடு, மஞ்சள் - குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விரதத்தை பூர்த்தி செய்யும் வகையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.