உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெருங்கியது கிளைமாக்ஸ்

நெருங்கியது கிளைமாக்ஸ்

திருப்பூர்;நாளை மதியத்துக்குள் திருப்பூரின் புதியஎம்.பி., யார் என்பது தெரிந்துவிடும்.திருப்பூர் லோக்சபா தொகுதியில், இந்திய கம்யூ., - சுப்பராயன், அ.தி.மு.க., - அருணாச்சலம், பா.ஜ., - முருகானந்தம், நாம் தமிழர் - சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஏப்., 19ல் நடந்த தேர்தலில், 11லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர்.நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவடைந்ததையடுத்து, நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.முதலில், காலை, 8:00 மணிக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கும். அதன்பின், 'ஸ்ட்ராங் ரூம்'களிலிருந்து கன்ட்ரோல் யூனிட்கள் எடுக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.

சட்டசபை தொகுதிகளுக்குதனித்தனியாக அரங்குகள்

ஆறு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியே ஓட்டு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமிலிருந்த கன்ட்ரோல் யூனிட்கள் எடுத்துவரப்பட்டு, அந்தந்த தொகுதிக்கான அரங்குகளில் போடப்பட்டுள்ள டேபிள்களில் வைத்து, எண்ணப்படும்.தபால் ஓட்டுக்கள் எட்டு டேபிள்களிலும்; மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள், சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள் வீதம், 84 டேபிள் என, மொத்தம் 92 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 1,745 அலுவலர்கள், ஓட்டு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்

ஓட்டு எண்ணிக்கை துவங்க இன்னும் 24 மணி நேரமே உள்ளது. பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், சுகாதாரம், உணவுக்கூடம், அந்தந்த தொகுதிக்கான எண்ணிக்கை மையத்துக்கு மட்டும் செல்லும் வகையில் தடுப்பு வழி என அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டு,எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது.சுற்றுவாரியாக ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதற்கு, தகவல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், ஓட்டு எண்ணிக்கை மையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

பார்வையாளர்கள்ஆலோசனை

திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு, ஓட்டு எண்ணிக்கை பார்வையாளராக ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர் ஓம்பிரகாஷ் ஆகிய இருவரும், மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இரு பார்வையாளர்களும், ஆளுக்கு தலா மூன்று சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணிகளை பார்வையிடுவர்.திருப்பூர் வடக்கு - 2,33,185திருப்பூர் தெற்கு - 1,63,855பவானி - 1,88,938கோபிசெட்டிபாளையம் - 2,00,355பெருந்துறை - 1,82,546அந்தியூர் - 1,66,388பதிவான மொத்த ஓட்டுகள் - 11,35,267முகவர்களுக்கு கட்டுப்பாடுகள்கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் சவுமியா உள்பட உதவி தேர்தல் அலுவலர்கள்; வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு வேட்பாளரும், தொகுதிக்கு ஒரு தலைமை முகவர் மற்றும் டேபிளுக்கு ஒரு முகவர் என, 13 வேட்பாளர்கள் 2,174 முகவர்களை நியமித்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் மொபைல் போன், ஸ்மார்ட்வாட்ச் உள்பட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டுவரக்கூடாது. பேனா, பேப்பர் கொண்டுவரலாம். நோய் பாதித்தோர், தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துவரலாம். தலைமை முகவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கால்குலேட்டரை, இன்றே தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை