| ADDED : ஆக 21, 2024 11:49 PM
உடுமலை : உடுமலை வட்டார அரசு துவக்கப்பள்ளிகளில், மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் இன்று துவங்குகிறது.அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கு, கலைத்திருவிழா கல்வியாண்டு தோறும் நடத்தப்படுகிறது. போட்டிகள் பள்ளி அளவில் துவங்கி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.கடந்த கல்வியாண்டு முதல், ஆறு முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே இப்போட்டிகள் நடத்தப்பட்டது.நடப்பாண்டு முதல், துவக்கப்பள்ளிகளுக்கும் கலைத்திருவிழா நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், துவக்கப்பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது குறித்து, கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.துவக்கப்பள்ளிகளுக்கு ஒன்று, இரண்டு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், போட்டிகள் நடக்கிறது.உடுமலை வட்டார அரசு துவக்கப்பள்ளிகளில், இன்று (22ம் தேதி) முதல் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவங்குகின்றன.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பள்ளி அளவில் நடத்துவதற்கு, இன்று முதல் மாத இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போட்டிகள் நடத்துவதற்கான சிறப்புக்குழு, நடுவர்கள் தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.போட்டிகளை நடத்துவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழுவினரின் ஒத்துழைப்புடன் போட்டிகளை நடத்த வேண்டுமெனவும் வழிமுறை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.