அவிநாசி;அத்திக்கடவு - அவிநாசி போராட்டக் குழு கூட்டமைப்பு சார்பில், தாமரைக்குளக்கரையில் நன்றி அறிவிப்பு மற்றும் சிதறு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தமிழகத்தில் விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் வாயிலாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம் - குட்டைகளில் நீர் நிரப்ப உதவும் திட்டம், 1916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதைக் கொண்டாடும் வகையில், 2016ல், போராட்டம் துவங்கிய இடமான, மங்கலம் ரோட்டில் உள்ள தாமரை குளக்கரையில், அனைவருக்கும் நன்றி கூறியும், திட்டம் நிறைவேறியதற்கும் சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. திட்டம் நிறைவேற சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த போராட்டக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பேசிய பலரும், 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட மற்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ள, 1,400 குளம், குட்டைகளையும், இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர். ---திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கனவான, அத்திக்கடவு - அவிநாசி திட்டச் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதைக் கொண்டாடும் வகையில், இதற்கான போராட்டம் துவங்கிய இடமான, திருப்பூர் மாவட்டம், அவிநாசி, மங்கலம் ரோடு, தாமரைக்குளம் அருகில், சிதறு தேங்காய் உடைத்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர்.