- நமது நிருபர் -வறட்சியின் பிடியில் உள்ள, பல்லடம் வட்டார மேற்கு பகுதி கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள், பி.ஏ.பி., பாசன திட்ட விரிவாக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் மற்றும் கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சுல்தான்பேட்டை வட்டார பகுதிகளில், தென்னை விவசாயம் பரவலாக நடந்து வருகிறது.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ள இப்பகுதியில், பாசனத்துக்கான நீரின் தேவை அதிகம் உள்ளது. பருவமழை உட்பட, பி.ஏ.பி., பாசன திட்டத்தை நம்பியே பெரும்பாலான பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது.பருவ மழை பொய்க்கும் போது, பி.ஏ.பி., திட்டம் ஓரளவு கைகொடுக்கிறது. இருப்பினும், பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரத்தின் மேற்கு பகுதி கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. பி.ஏ.பி., பாசன வாய்க்கால் இப்பகுதியில் இல்லாததே இதற்கு காரணமாக உள்ளது.ஆனால், கரடிவாவி, அனுப்பட்டி, புளியம்பட்டி, கேத்தனுார், பருவாய், கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களும்; சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 'செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, வாரப்பட்டி,இடையர்பாளையம், சின்னக்குயிலி, போகம்பட்டி, பொன்னாக்காணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களும் பி.ஏ.பி., பாசன வசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றன.பி.ஏ.பி., பாசன திட்டம் துவங்கிய காலத்தில் இப்பகுதிகள் விடுபட்டதால், இன்றளவும் பாசன வசதி இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், தற்போது நீர் ஆதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இது பல்லடம், சுல்தான்பேட்டை வட்டார மேற்குப் பகுதி கிராம விவசாயிகளை பெரிதும் கவலையடையச்செய்துள்ளது.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் புதிய அரசு அமைந்ததும், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விடுபட்ட பகுதிகளிலும், பாசன கால்வாயை விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.