உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள்

கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள்

மழை எங்கெங்கோ பெய்தாலும், பொங்கலுார் வட்டாரத்திலோ, குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. கடும் வெயில் வாட்டியதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. வைகாசி பட்டம் துவங்கி உள்ள போதிலும் பெரும்பாலான விவசாயிகள் பயிர் சாகுபடியை கைவிட்டுள்ளனர்.தென்னை மரங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல இடங்களில் புதிது புதிதாக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகின்றனர். ஆனாலும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. தென்னை மரங்கள் குற்றுயிரும், குலை உயிருமாக காட்சியளிக்கின்றன.மழைக்காலம் துவங்க இரண்டு மாதங்கள் உள்ளது. அதுவரை தென்னையை காப்பாற்றுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தென்னையை காப்பாற்ற பாக்கி உள்ள பி.ஏ.பி., தண்ணீரை கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தண்ணீருக்கு கைவிரிக்கக்கூடாது

பி.ஏ.பி., வாய்க்காலில் பாசனத்துக்கு ஐந்து சுற்று தண்ணீர் விடப்படும். முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இரண்டரை சுற்று தண்ணீர் விடுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு சுற்று மட்டுமே விடப்பட்ட நிலையில் தண்ணீர் இல்லை என்று அரசு கை விரித்தது. தற்போது நல்ல மழை பெய்து சோலையாறு அணை, 100 அடியை தாண்டி உள்ளது.வரும் ஆடி மாதத்தில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்கு முன், முதல் மண்டல பாசனத்துக்கு பாக்கி வைத்துள்ள அரை சுற்று தண்ணீருக்குப் பதிலாக ஒரு சுற்று தண்ணீர் திறந்து விட்டு, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.- பொங்கலுார் வட்டார விவசாயிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை