உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீட் குறித்து முதல்வரின் முரண்பட்ட கருத்து: கல்வித்துறையினர் மத்தியில் பெரும் குழப்பம்

நீட் குறித்து முதல்வரின் முரண்பட்ட கருத்து: கல்வித்துறையினர் மத்தியில் பெரும் குழப்பம்

திருப்பூர்:தமிழகத்தில், 'நீட்' தேர்வு எழுதும் மாணவ, மாணவியரை கல்வித்துறையினர் ஊக்குவித்து, பயற்சி வழங்கி வரும் அதே நேரம், 'நீட்' தேர்வுக்கு எதிரான கருத்துக்களை முதல்வர் கூறி வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.மருத்துவ படிப்புக்கான நீட் எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரும் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெறுகின்றனர்.இந்தாண்டு தமிழகத்தில், 1.44 லட்சம் பேர் நீட் தேர்வெழுதினர்; இதில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டை விட இந்தாண்டு உயர் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில், அரசுப் பள்ளிகளில் படித்த, 12,997 மாணவ, மாணவியர் நீட் தேர்வெழுதியதில், 4,118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரை நீட் தேர்வுக்கு தயார்படுத்த அந்த மாவட்ட அளவில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி மையங்கள் நிறுவி, ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுகிறது.நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களையும், அந்தந்த மாவட்ட கலெக்டர் ஊக்குவிக்கின்றனர்; கவுரவப்படுத்துகின்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகளவு மாணவ, மணவியர் நீட் தேர்வெழுத ஊக்குவிக்கின்றனர். அதே நேரம், நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கருத்து கூறி வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வு வெளியான போது, நீட் தேர்வை ஒழிக்க கை கோர்ப்போம் எனக் கூறியிருந்தார்.கல்வித்துறையினர் சிலர் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் நிலைபாடு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் கருத்துக் கூறி வருகிறார். மறுபக்கம் நீட் தேர்வு மற்றும் அதனை எழுதுவோருக்கு கல்வித்துறையினர் சிறப்பான முறையில் ஊக்குவிப்பும், பயிற்சியும் வழங்கி வருகின்றனர்.இன்னொருபுறம் நீட் தேர்வில் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பாராட்டு விழா நடத்தி சான்றிதழ் வழங்கி வருகின்றன. இவ்வாறு, நீட் விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகள் தென்படுகின்றன. இதனால், நீட் தேர்வை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள கல்வித்துறையினர் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி