திருப்பூர்;திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே தினசரி மார்க்கெட் இயங்கிவந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. கடைகள் விவகாரம் குறித்து, திருப்பூர் மாநகராட்சி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகா சபை கூட்டத்தில் சில முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு ஒருதரப்பினரிடையே தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. ---திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்.
புதிய சங்கம் உருவாகிறது
சங்க துணை செயலாளர் சிவகுமார் கூறியதாவது:மார்க்கெட்டில், 423 வியாபாரிகள் உள்ளனர். இதில், 150 பேர் காய்கறி வியாபாரிகள். முன்பு இருந்த மார்க்கெட்டை இழந்தோம். காட்டன் மார்க்கெட்டில் இடம் கிடைத்தது. சிலரால், அங்கு காய்கறி வியாபாரிகள் ஒதுக்குப்புறமாக தள்ளப்பட்டோம். உரிமையை இழந்து நிற்கிறோம். பணபலம் படைத்தவர்களால் ஏழை வியாபாரிகள் அடக்கி ஒடுக்கப்பட்டோம்.மார்க்கெட் வளாகம் கட்டுமானம் நிறைவடையாமல் உள்ள நிலையில், சங்கம் இதில் எந்த முடிவும் எடுப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், சங்கத்தின் பெயரால் முன்புற கடைகள், வாடிக்கையாளர் அதிகளவில் வந்து செல்லும் பகுதி கடைகளை பெறும் வகையில் காய் நகர்த்துகின்றனர்.மார்க்கெட் கடை வாடகை நிர்ணயத்தில் பாரபட்சம் உள்ளது. இதுகுறித்து கேட்டால் புது வளாகத்தில் கடை கிடைக்காது என மிரட்டுகின்றனர். சங்க செயல்பாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, காய்கறி வியாபாரிகள் தங்கள் உரிமையைப் பெற, 'தினசரி மார்க்கெட் அழுகு பொருள் வியாபாரிகள் சங்கம்' என்ற புதிய சங்கம் உருவாக்கப்படவுள்ளது.இதன் வாயிலாக, மார்க்கெட் கடை ஏலத்தை முறையாக மாநகராட்சி நிர்வாகம் நடத்தவும், இதில் காய்கறி கடைகளுக்கு தரை தளத்தில் உள்ள, 178 கடைகளும் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிளவு 'பாச்சா' பலிக்காது
சங்கத் தலைவர் தங்கமுத்து கூறியதாவது:சங்கத்தைப் பொறுத்தவரை எந்த பிளவும் இல்லை. சமீபத்தில் நடந்த மகா சபை கூட்டத்தில் பங்கேற்று, தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு தற்போது இதுபோல் சமூக வலை தளங்களில் தேவையற்ற தகவல்களை இருவர் பரப்புகின்றனர்.இதில், ஈடுபட்டுள்ள தம்பி குமாரசாமி, சிவகுமார் ஆகியோர் நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் மீது சங்க விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மார்க்கெட் வாடகை விவகாரத்தில் சங்கத்தின் சார்பில் 2.80 கோடி ரூபாய் வசூலித்து செலுத்தப்பட்டுள்ளது. முறையாக வாடகை செலுத்திய, 293 பேர் பட்டியல் மாநகராட்சியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலும் சங்க செயற்குழுவில் ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைத்து அதன் மூலம் சரி பார்த்து தான் வழங்கப்பட்டுள்ளது.பூ மார்க்கெட் சங்கத்தை உடைத்து வியாபாரிகளை நடுத்தெருவில் நிறுத்தியது போல் இங்கும் நடத்த நினைக்கின்றனர். சங்க செயலாளராக இருந்து முறைகேடு புகார் காரணமாக பதவி பறிக்கப்பட்டவர் தற்போது இது போல் தவறான செய்திகளைப் பரப்புகிறார். சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையாக உள்ளனர். நிர்வாகம் சங்க நலனுக்காக உழைத்து வருகிறது. இதில் பிளவு ஏற்படுத்தும் நினைப்பு பலிக்காது.