| ADDED : ஏப் 27, 2024 12:48 AM
திருப்பூர்;ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பிரிவில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் சீனிவாசன் அறிக்கை:தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் கோவை, சாய்பாபா காலனியில் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்படுகிறது.வரும் கல்வியாண்டில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ (டி.கோ.ஆப்.) பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான முன் பதிவு வரும் 29ம் தேதி முதல் துவங்குகிறது. செப்., மாதம் முதல் ஓராண்டு காலம் இப்பயிற்சி நடைபெறும். இரு பருவங்களாக பாடம் மற்றும் தேர்வுகள் நடைபெறும். தமிழ் வழிப் பாடம் மட்டும் நடத்தப்படும்.இதில் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள், கட்டணம், தகுதி, நிபந்தனை ஆகிய விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.சேர்க்கைக்குwww.tncuicm.comஎன்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையில், டாக்டர் அழகேசன் ரோடு, சாய்பாபா காலனி கோவை, 11 முகவரி அல்லது 0422 244 2186 எண்ணில் பெறலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
துணை தேர்வு
கூட்டுறவு மேலாண்மை பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கப்படும், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு (டி.கோ-ஆப்.,) புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை 20 ஆண்டு நடந்த பாடத்திட்டம் (சிலபஸ்) முடிவு கட்டப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் படித்து தேர்ச்சி பெறாதவர்கள், துணை தேர்வுகளை வரும் 2025 டிச., மாதத்துக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். மேலாண்மை நிலையத்தை அணுகி உரிய முறையில் விண்ணப்பித்து தேர்வெழுத வேண்டும்.தவறும் பட்சத்தில் 2022 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில், முழு நேர வகுப்பில் சேர்ந்து முழுமையாக பயிற்சி பெற்று தேர்வு எழுதினால் மட்டுமே பட்டயச் சான்று வழங்கப்படும்.