உடுமலை;முட்டை முதல், இளம் புழு வளர்ப்பு வரை குளறுபடி காரணமாக, பட்டுக்கூடு, நுால் தரம் குறைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது:தமிழகம் வெண் பட்டுக்கூடு தரம் மற்றும் உற்பத்தியில், தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. பட்டு புழு முட்டை, அரசு முட்டை வித்தகங்களிலிருந்து, இளம் புழு வளர்ப்பு மனைகளில், 7 நாட்கள் வளர்த்தப்பட்டு, விவசாயிகள் கொள்முதல் செய்கின்றனர்.அதன் பின், 21 நாட்கள் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் வளர்க்கப்பட்டு, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.முட்டை வித்தகங்களில் தரமற்ற முட்டை வினியோகம், இளம் புழு வளர்ப்பு மனைகளில் குளறுபடி, சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால், பட்டுக்கூடு உற்பத்தி, 60 சதவீதம் வரை பாதித்துள்ளது.2 கிராம் பட்டுக்கூட்டிலிருந்து, 1,500 மீட்டர் நுால் உற்பத்தியான நிலையில், தற்போது, 950 மீட்டர் மட்டுமே உற்பத்தியாகிறது.மத்திய, மாநில அரசு பட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள், கண்டு கொள்ளாததால், விவசாயிகள் தொடர்ந்து பாதித்து வருகிறனர்.கடந்த, ஆறு மாதமாக, உற்பத்தி சரிவு, இடு பொருட்கள் விலை உயர்வு, விலை சரிவு என கடும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் இணைந்து, பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.