திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவிலில், நாடி வரும் பக்தர்களுக்கு ஓடி வந்து அருள்பாலிக்கும் அம்பிகை கொலுவிருக்கிறாள். முன்பு சிறிய ஓட்டு கட்டடத்தில் இருந்த கோவில், புனரமைத்து கட்டப்பட்டது. பிறகு மீண்டும் திருப்பணி செய்து, ராஜகோபுரத்துடன் கோவில் அமைக்கப்பட்டது.அரசு மற்றும் வேப்ப மரங்களின் நிழலில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்டு, அன்னையின் கோவிலுக்கு செல்லலாம். பிரமாண்டமான, மூன்று நிலை ராஜகோபுரம் வழியாக சென்றால், அன்னை எதிர்கொண்டு அழைப்பது போல், பிரகாசமாக காட்சியளிக்கிறார்.இடதுபுறமாக சென்றால், ராஜராஜேஸ்வரி அம்மன், விநாயகர் மற்றும் முருகர் உற்சவர்கள் அருள்பாலிக்கின்றனர். அதனருகே, ராஜவிநாயகர் கிழக்கு நோக்கி, தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். வடமேற்கு மூலையில், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.அதனருகே, பஞ்சலோகத்திலான, சிவபெருமான் நின்ற கோலத்திலும், வலதுபுறமாக அம்மன் அமர்ந்த கோலத்திலும் காட்சியளிக்கின்றனர். கோவில் வளாகத்தில், ராஜகோபுரத்துக்கு வடபுறம், குழந்தையை கையில் ஏந்தியபடி பேச்சியம்மனும், தென்புறம் பழனி குன்றில் நிற்பது போல், தண்டபாணியும் காட்சியளிக்கின்றனர்.அம்மன் கோவில் வளாகம், கருப்பு பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சிஅளிக்கிறது; துவார சக்திகளின் அனுமதியை பெற்றே, பக்தர்கள் அன்னையை தரிசிக்க சென்று வருகின்றனர். அம்மன் சன்னதியை சுற்றிலும், மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, துர்க்கை, இந்திரானி தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.கோட்டையில் இருந்து திருப்பூரை ஆளும் ஸ்ரீமாரியம்மனுக்கு, ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்கள், ராகிக்கூழ் காய்ச்சி வந்து, அம்மனுக்குபடைத்து வழிபடுகின்றனர். வெளியே உள்ள கருப்பராய சுவாமிக்கு, கிடா வெட்டி, படையலிடப்படுகிறது. கன்னிமார் சுவாமிகளுக்கு, காதோலை - கருவளையம் வைத்து படையல் போட்டு வழிபாடு நடக்கிறது.மாசிமாத வளர்பிறையில், அம்மனுக்கு பூச்சாட்டு பொங்கல் விழா, ஒரு வாரம் கோலாகலமாக நடக்கிறது. கம்பத்துக்கு மஞ்சள்பூசி, குங்குமம் வைத்து சுமங்கலி பெண்கள் வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறினால், பக்தர்கள் மண்ணால் செய்த உருவங்களை அம்மன் கோவில்களில் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருப்பூரே களை கட்டும்!
மாவிளக்கு ஊர்வலம், பூவோடு ஊர்வலங்களால், திருப்பூர் நகரமே, மாசி பூச்சாட்டு விழாவில் களைகட்டும். அருட்பேராற்றல் பொருந்திய மாரியம்மன், கருணை பொங்கும் விழிகளுடன், விநாயகர், முருகர் சுவாமிகளை இருபுறமும் வைத்தபடி, தனி கருவறையில் காட்சியளிக்கிறாள். அம்மை நோய் பாதித்தவர்கள், இங்கு வேண்டிக்கொண்டு, தீர்த்தம் வாங்கி சென்று தெளித்தால் விரைவில் குணமடைவதாக நம்புகின்றனர்.திருமண தடை, குழந்தை, தொழில்வளம் வேண்டியும், பக்தர்கள் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடத்தி, அம்மனிடம் வேண்டுதல் வைக்கின்றனர்; அன்னையின் கருணையால், வரங்களை பெறும் பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை குளிர்விக்கின்றனர்.திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவிலில், தினமும் நான்குகால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை, மதியம், மாலை மற்றும் இரவு நேர பூஜைகள் தினமும் நடந்து வருகிறது. அத்துடன், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் விசேஷமானது. எங்கே உள்ளது...
திருப்பூர், தாராபுரம் ரோடு, தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகில்.சிறப்பு பூஜைகள்:திருமண தடை அகல, குழந்தை பாக்கியம் பெற, தொழில்வளம் சிறக்க சிறப்பு அபிேஷக பூஜைகள் செய்யலாம்.தொடர்புக்கு:97864 97954