திருப்பூர்;ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள, இது வரை பயணத்தேதி உறுதிப்படுத்தப்படாத தமிழக ஹஜ் பயணிகளுக்கு வரும் 31ம் தேதிக்குள் விமான ஒதுக்கி, தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் பயணத்துக்கு நடப்பாண்டில், தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தயாராகி உள்ளனர். கடந்த 26ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் இவர்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 200 பேருக்கு பயணத் தேதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், தமிழக ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் பயணிகளுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூரைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் கூறியதாவது:ஹஜ் கமிட்டி சார்பில் எங்களுக்கு அனுப்பிய தகவலில், வரும் 31ம் தேதிக்குள் அனைவருக்கும், விமானம் ஏற்பாடு செய்து, பயணத் தேதி அறிவிக்கப்படும். தமிழக ஹஜ் கமிட்டி யாரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்காது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த திருப்பூர், திருச்சி பகுதியினர் மற்றும் வெளி மாநிலத்தவருக்கும் விமானம் ஏற்பாடு செய்யப்படும், என்று தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். காரணம் என்ன?
நாடு முழுவதும், 17 மையங்களிலிருந்து விமானங்கள் ஹஜ்பயணம் மேற்கொள்ளும் வகையில் இயக்கப்படுகிறது. வழக்கம் போல் தனியார் விமான நிறுவனம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையிலிருந்து விமானம் புறப்படும். இங்கிருந்து, 5,365 பேர் செல்ல இருந்த நிலையில், 5,411 பேருக்கு விமானங்கள் தயார்படுத்தப்பட்டன.இருப்பினும் பிற மாநிலத்தினர் சென்னையில் விமானம் ஏற விருப்பம் தெரிவித்த நிலையில் இதன் எண்ணிக்கை 5,700 ஆக உயர்ந்தது. வரும் ஜூன் 9ம் தேதி வரையில் பட்டியலிடப்பட்ட அனைத்து விமானங்களும் நிரம்பி விட்டது.கூடுதல் விமானம் ஏற்பாடு செய்ய விமான நிறுவனத்துடன் பேச்சு நடக்கிறது. இரண்டு நாளில் இந்த ஏற்பாடுகள் முடிவடைந்து விடும். அவ்வகையில், 31ம் தேதிக்குள் விடுபட்ட அனைவருக்கும் பயண தேதி உறுதிப்படுத்தப்படும்என ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.