'சிரிக்காத ஒரு நாள் வீணானது' என்றார், நகைச்சுவை ஜாம்பவான், நடிகர் சார்லி சாப்ளின்.'இன்முகத்துடன் பேசும் போது, மனதளவில் புண்பட்ட இதயங்கள் கூட, ஆற்றுப்பெறும்' என்பார்கள். அது, வீடாக இருந்தாலும் சரி; பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி. புன்னகை பூவால் அலங்கரிக்கப்படும் எந்த இடமும் அழகு தான். 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்', 'உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்' என்பார்கள்.அந்தளவு இதயத்தின் வலி போக்கும் அரு மருந்தாகவே, சிரிப்பு இருக்கிறது. ஆனால், இன்றைய இயந்திரத்தனமான உலகில், வேலை, வருமானம், குடும்ப சுமை என, அடுத்தடுத்த பணியால், சிரிப்பை மறக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கெல்லாம் மேலாக வீடுகளின் வரவேற்பறையை ஆக்கிரமித்து கொண்ட டிவி, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வரையும் விட்டு வைக்காத மொபைல் போன் பயன்பாடு, இன்டர்நெட் போன்ற தொழில்நுட்ப வலையில் சிக்கியுள்ள மக்கள், சிரிப்பை சிறை வைத்து விட்டனர் என்று சொல்வதிலும் மிகையில்லை.சிரிப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை (இன்று) உலக சிரிப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 'நல்ல சிரிப்பு என்பது, நமது ஆன்மா மற்றும் மனதை பிரகாசமாக்குகிறது' என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக தான், சிரிப்புக்கென்றே ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் சிரிப்பு தினத்தையொட்டி ஒவ்வொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு, 'ஒன்று கூடி சிரிப்போம்; ஒற்றுமையுடன் இருப்போம்' என்ற மையக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.'சிறை வைக்கப்பட்ட சிரிப்பை மீட்டெடுக்க வேண்டும்' என்ற நோக்கில், கடந்த, 2014ல், திருப்பூரில் 'சிரிப்பு மன்றம்' என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாதந்தோறும், ஒரு திருமண மண்டபத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்படுவது, வாடிக்கையாக இருந்து வந்தது. இதில், நகைச்சுவை பேச்சாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். சிரிப்பு ஆகச்சிறந்த மருந்து
சிரிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி கூறியதாவது:மக்களின் மகிழ்ச்சி மறையும், சிரிப்பு குறையவும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணம். வேலை, பணம் என, மக்கள் பொருளாதாரத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றனர்; இதனால், சிரிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது.மகிழ்ச்சியை தொலைத்து விட்டு, பணத்தை நோக்கி ஓடும் நிலையில் தான் பலரும் உள்ளனர். இதனால் தான், 'சிரிப்பு மன்றம்' என்ற பெயரில் ஒரு அமைப்பையே ஏற்படுத்தினோம்.தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்டு, சிரித்து மகிழ்ந்த சூழ்நிலையை, இக்கால குழந்தைகள் இழந்திருக்கிறார்கள்; காரணம், சிதைந்து போன கூட்டுக்குடும்பங்கள் தான்.சிரிப்பு என்பது, ஆகச்சிறந்த மருந்து என்பதை, இக்கால குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கல்லுாரி களில் சிரிப்பு மன்றம் என்ற அமைப்பு உள்ளது. அதில் இணைந்துள்ள மாணவ, மாணவியர் சிரிப்பு தொடர்பான நிகழ்ச்சி நடத்துகின்றனர். பள்ளிகள் அளவிலும் சிரிப்பு மன்றம் உருவாக்கி பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவியர் மத்தியில் சிரிக்கும் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.(இன்று உலக சிரிப்பு தினம்)'நல்ல சிரிப்பு என்பது, நமது ஆன்மா மற்றும் மனதை பிரகாசமாக்குகிறது' என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக தான், சிரிப்புக்கென்றே ஒரு நாள் கொண்டாடப்படுகிறது