உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு அணிவகுத்த யானைகளால் உற்சாகம்

புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு அணிவகுத்த யானைகளால் உற்சாகம்

உடுமலை:தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மூன்று நாட்களாக நடந்தது. அதன் அடிப்படையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரக பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி நடந்தது.இப்பணி, 53 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வனத்துறையினர், தன்னார்வலர்கள், என, 157 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த, 23ம் தேதி முதல் நாள், 15 கி.மீ., துாரம் வரை நடந்து, நேரடியாக யானைகளை கணக்கெடுத்தனர்.இரண்டாவது நாள், 2 கி.மீ., துாரம் வரை நேர்கோட்டு பாதையில் நடந்து சென்று, யானை லத்தி உள்ளிட்ட எச்சங்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. நேற்று, நீராதாரங்களில், கணக்கெடுப்பு என மூன்று நாட்கள் நடந்தது.இதில், ஆண், பெண், குட்டி, மக்னா என பாலினம் மற்றும் வயது வாரியாக கணக்கெடுக்கப்பட்டது. வழக்கத்தை விட, கூடுதல் யானை கூட்டங்களும், யானை குட்டிகளும் தென்பட்டன. அதிலும், அமராவதி அணைக்கு நீர் தேடி, உடுமலை - மூணாறு சாலையை யானைக்கூட்டங்கள் அதிகளவு கடக்கின்றன.கணக்கெடுப்பு குறித்த ஆவணங்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, ஒருங்கிணைக்கப்பட்டு எண்ணிக்கை வெளியிடப்படும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி