திருப்பூர்;திருப்பூர், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்; டாக்ஸி டிரைவர். அவரது மகன், தரணிதரன். 7ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு, திடீரென கால்கள் செயலிழக்க துவங்கியது; 'தசைநார் அழிவு' நோய் தாக்க, அவரால் நடக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டது.சக்கர நாற்காலியில் தான், அவரை அவரது பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தனர். கால்கள் செயலிழந்தாலும், அவரது அறிவாற்றல் சிறப்பாக இருந்தது; தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற ஆவல், அந்த மாணவனிடம் மேலோங்கியது. இருப்பினும், பள்ளிக்கு வரும் வாய்ப்பை வழங்க, பள்ளி நிர்வாகம் தயங்கிய நிலையில், பள்ளியில் இருந்து இடைநின்றார் தரணிதரன்.அதன்பின், ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரியில் இணைந்து படிக்க வைத்தனர் அவரது பெற்றோர். மாணவனின் குடும்ப சூழ்நிலை, அவரது அறிவாற்றலை உணர்ந்த டுட்டோரியல் கல்லுாரி முதல்வர் டாக்டர். தங்கராஜன், அந்த மாணவனை கல்வியில் கரை சேர்க்க முன்வந்தார்.எட்டாம் வகுப்பு தேர்வெழுதி, தேர்ச்சி பெற்ற தரணிதரன், 10ம் வகுப்பு தேர்வெழுதி, 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றார். தற்போது, 12ம் வகுப்பு பொது தேர்வெழுதிய தரணிதரன், 600க்கு, 411 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். வணிகவியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்று, வியப்பில் ஆழ்த்தினார்.ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி முதல்வர் தங்கராஜன் கூறுகையில்,''உடலில் பிரச்னை இருந்த போதும் படிக்க வேண்டும் என்ற தரணிதரனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அவரது கல்வி செலவை நாங்களே ஏற்று படிக்க வைத்து வருகிறோம். இதுபோன்ற மாணவர்களுக்கு, கல்வி வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார்.