தனது, 28வது வயதில், தேச விடுதலைப்போரில் இன்னுயிர் நீத்த திருப்பூர் குமரனின் கதை கேட்டு வளர்ந்த, அவரது கொள்ளுப்பேரன் டாக்டர் நிர்மல்ராஜ் நம்மிடம் பகிர்ந்தவை:எங்கள் பாட்டி ராமாயி அம்மாள் (திருப்பூர் குமரனின் மனைவி) ஓடக்காடு லிங்கே கவுடர் வீதியில் இருந்த வீட்டில் எங்களோட தான் வாழ்ந்தார். தாத்தா தியாகி குமரன் வாழ்க்கை குறித்து அவர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.காந்தியடிகளை மிகத் தீவிரமாக அவர் பின்பற்றியிருக்கிறார். பஞ்சு குடோனில் எடை போடும் குமாஸ்தாவாக பணி செய்து கொண்டிருந்த அவர், தனது வேலையில் நேர்மையானவராக இருந்திருக்கிறார். பல நேரங்களில், அவரின் பெற்றோர், குடும்பத்தினருக்கு தெரியாமல், இரவு நேரங்களில் நடக்கும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான கூட்டங்களுக்கு சென்று விடுவாராம். 'போராட்டத்துல எல்லாம் கலந்துக்கக்கூடாது'ன்னு பெற்றோர், குடும்பத்தினர் சொல்லியும் கேட்க மாட்டாராம். ஒரு 'கால்கட்டு' போட்டா, போராட்டங் களில் கலந்து கொள்ள மாட்டார்ன்னு நினைச்சு தான், அவருக்கு திருமணம் செஞ்சு வச்சிருக்காங்க. 1923ல், அவங்க திருமணம் நடந்திருக்கு. அப்போது திருப்பூர் குமரனுக்கு, 19 வயசு; ராமாயி அம்மாளுக்கு, 13 வயசு. கடந்த, 1932ல், திருப்பூரில் நடந்த போராட்டத்தில் குமரன் பங்கெடுத்த போது, போலீசாரின் பூட்ஸ் காலில் மிதிபட்டு, அடிபட்டு இறந்திருக்கார். கையில் கொடியை மட்டும் அப்படியே பிடிச்சிருந்திருக்காரு... 'அந்த போராட்டத்துல கலந்துக்க வேண்டாம்'ன்னு எங்க பாட்டி சொன்னாங்களாம்.'கலந்துக்க மாட்டேன்; நான் வேலைக்கு தான் போறேன்'னு சொல்லிட்டு போயிருக்காரு. எங்க பாட்டியை அவங்க ஊருக்கும் அனுப்பி வச்சிருக்காரு. குடும்பத்தினருக்கே தெரியாம தான் அந்த போராட்டத்துல கலந்துக்கிட்டதா எங்க பாட்டி சொன்னாங்க.அவங்களோட குடும்ப வாழ்க்கை, வெறும், 9 வருஷம் தான். அதுக்கு அப்புறம், 66 வருஷம் எங்க பாட்டி வாழ்ந்தாங்க; 1998 ஏப்., 18ம் தேதி தன்னோட, 88வது வயசுல இறந்தாங்க. இவ்வாறு நிர்மல்ராஜ் கூறினார். அவரது கண்களில் நீர்த்துளிகள்.