உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலர் தீவன பற்றாக்குறையால் திணறல் :மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு

உலர் தீவன பற்றாக்குறையால் திணறல் :மானிய திட்டத்துக்கு எதிர்பார்ப்பு

உடுமலை;வறட்சியால், தீவனத்தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், பால் உற்பத்தி குறைவதை தவிர்க்க, உலர் தீவன கிடங்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக மாடுகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு, பால் விற்பனை செய்வதில் கிடைக்கும் வருவாய், பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.கடந்தாண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை; இந்தாண்டு கோடை மழையும் பெய்யாமல் வறட்சி துவங்கியுள்ளது. இதனால், மேய்ச்சல் நிலங்கள் பசுமை இழந்துள்ளன; கிணற்றுப்பாசனத்திலும் போதிய தண்ணீர் இல்லாமல், தீவனப்பயிர்களை பராமரிக்க முடியவில்லை.எனவே, உலர் தீவனம் மட்டுமே கால்நடைகள் பராமரிப்புக்கு ஒரே தீர்வாக அமைந்துள்ளது. ஆனால், உடுமலை வட்டாரத்தில், தேவைக்கேற்ப உலர் தீவனம் கிடைப்பதில்லை.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, மக்காச்சோளம் குறைந்த பரப்பளவிலேயே சாகுபடி செய்யப்பட்டதால், உலர் தீவனமான மக்காச்சோள தட்டு போதியளவு கிடைக்கவில்லை.கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: பசுந்தீவனத்துக்கும், உலர் தீவனத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பால் உற்பத்தியில் சிக்கல் நிலவுகிறது. நெல் சாகுபடி பகுதியில் இருந்து உலர் தீவனமான வைக்கோல் வாங்கி வந்தால், நிலைமையை சமாளிக்க முடியும்.ஆனால், பிற மாவட்டங்களில் இருந்து உலர் தீவனத்தை வாங்கி வர அதிக செலவாகிறது. தமிழக அரசு கால்நடை வளர்ப்புக்கும், பால் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க உலர் தீவன கிடங்கு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தியது.திட்டத்தில், 5 மாடுகளுக்கு அதிகபட்சமாக 105 கிலோ வைக்கோல், மானியத்தில், வழங்கப்பட்டது. திட்டம் துவக்கத்தில், உலர் தீவன கிடங்கில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிலோ வைக்கோல் பயனாளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.தஞ்சாவூர் உட்பட பகுதிகளிலிருந்து, கால்நடைத்துறை சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட வைக்கோல் தரமாக இருந்ததால், அதிகளவு இத்திட்டத்தில் பயன்பெற்றனர். எனவே, மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தி, பால் உற்பத்தி பாதிக்காமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி