திருப்பூர்;திருப்பூர் ஒன்றியம், முதலி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மாணிக்காபுரம். அங்குள்ள, 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், ஒரு காலத்தில் பாசன கட்டமைப்புடன் பயன்பாட்டில் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக, புதர்மண்டி கிடந்த குளத்தை, மாணிக்காபுரம் குளம் காக்கும் அமைப்பினர், மீட்டெடுத்தனர்.குளத்தை முழுமையாக துார்வாரி, காசிபாளையம் நொய்யல் அணைக்கட்டில் இருந்து செல்லும் ராஜவாய்க்காலை துார்வாரி சுத்தப்படுத்தினர். இதன்காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் தண்ணீர் குளத்தில் தேக்கப்பட்டது; சுற்றுப் பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.பொதுப்பணித்துறையினர் வழிகாட்டுதலுடன், குளம் காக்கும் அமைப்பினர் மூலமாக, குளம் துார்வாரி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் நகரப்பகுதியில், நொய்யலில், ஆண்டு முழுவதும் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. மழை காலங்களில், மழை வெள்ளம் பாய்ந்தோடும் போது, குளத்துக்கு தண்ணீர் திருப்பி, தண்ணீரை குளத்தில் தேக்கி வைக்க முயற்சித்து வருகின்றனர்.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணிக்காபுரம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், ராஜவாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. காசிபாளையம் முதல், பொன்னாபுரம் வரையிலான, வாய்க்கால், புதர்மண்டி காணப்பட்டது. இதனால், பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, வாய்க்கால் துார்வாரி சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இதுகுறித்து மாணிக்காபுரம் குளம் காக்கும் அமைப்பினர் கூறுகையில், ''குளத்தில் தண்ணீரை முழுமையாக நிரப்பினால் மட்டுமே, ஆண்டு முழுவதும், நிலத்தடி நீர் மட்டம் கைகொடுக்கும். இறவை பாசனமும் தடையின்றி நடக்கும். அதற்காக, விவசாயிகள் இணைந்து, ராஜவாய்க்கால் துார்வாரி வருகிறோம். ஒரு வாரத்துக்குள் பணிகள் நிறைவு பெறும். நொய்யலில் அடுத்த வெள்ளம் வரும் போது, மாணிக்காபுரம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம்,' என்றனர்.