உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு திட்ட குழாய்களில் உடைப்பு

அத்திக்கடவு திட்ட குழாய்களில் உடைப்பு

அன்னுார்;அத்திக்கடவு திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டர் நீர் வீணாகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1044 குளம், குட்டைகளில், பவானி ஆற்றில் உபரியாக செல்லும் நீரை பயன்படுத்தி, நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆற்றில் போதுமான நீர் இல்லாததால், கடந்த ஆறு மாதமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அதிகரித்ததால்,காளிங்கராயன் அணைக்கட்டில் நீர் அதிகமாக சேர்ந்துள்ளது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக, கோவில்பாளையம் மற்றும் அன்னுார் வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு சோதனை ஓட்டத்தில் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல இடங்களில், குழாய் உடைப்பு ஏற்பட்டு, குளங்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அன்னுார், ஓதிமலை சாலையில், புள்ளாமடை பிரிவில், பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக குழாயில் கசியும் தண்ணீர் சாலை வழியாக சென்று அப்பகுதியில் உள்ள மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு ஏக்கர் குட்டையை நிரப்பியுள்ளது. இதை அடுத்து, பாசக் குட்டை பிரிவிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளத்தில் ஏராளமான நீர் கடந்த இரண்டு நாட்களாக வீணாக சென்று கொண்டிருக்கிறது. லக்கேபாளையத்திலும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அன்னுாரின் வடக்கு பகுதியில் மூன்று இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வடக்கலூர், பாசக்குட்டை உள்ளிட்ட வடக்கு பகுதியைச் சேர்ந்த குளங்களுக்கு அத்திக்கடவு நீர் செல்லவில்லை. குளங்கள் நீர் இல்லாமல் மைதானம்போல் காட்சியளிக்கிறது.இதுகுறித்து அத்திக்கடவு ஆர்வலர்கள் கூறுகையில், 'குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் உடைப்பை சரி செய்து அனைத்துக் குளங்களுக்கும் நீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை