| ADDED : ஜூன் 12, 2024 10:38 PM
பல்லடம் : வாகன போக்குவரத்து நிறைந்த கோவை- - திருச்சி ரோட்டில், பல்லடம் நகரம் அமைந்துள்ளது. முக்கிய அரசு அலுவலகங்கள் இதே ரோட்டில் அமைந்துள்ளன.பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட்டும் உள்ளது. இவ்வாறு, முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் வேக கட்டுப்பாடை பின்பற்ற வேண்டும்.நகரப் பகுதியில் விதிக்கப்படும், 30 கி.மீ., என்ற வேகக் கட்டுப்பாட்டை பெரும்பாலான வாகனங்கள் பின்பற்றுவதில்லை. குறிப்பாக, அரசு தனியார் பஸ்களிடையே அவ்வப்போது ஏற்படும் போட்டிகள் மற்றும் தனியார் பஸ்களின் மித மிஞ்சிய வேகம் ஆகியவை, நகரப் பகுதியில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.விபத்துகள், உயிரிழப்பை கருத்தில் கொண்டு பல்லடம் -- காரணம்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில்தான் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இந்த ரோடு விரிவாக்கமே உயிரைக் கொல்ல வழிவகுப்பதாக அமைந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், ரோட்டின் இருபுறமும் தங்கு தடையின்றி செல்லும் வாகனங்கள், போட்டி போட்டுக் கொண்டு பிற வாகனங்களை முந்தி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றன.போக்குவரத்து விதிமுறைகளை மீறி இடது பக்கமாகவும் முந்திச் செல்ல முயல்வதால், ரோட்டோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.இவ்வாறு, பல்லடம் நகருக்குள் நுழையும் வாகனங்களின் விதி மீறல்கள் மற்றும் வேகக்கட்டுப்பாட்டை போலீசார் கண்காணிக்க வேண்டும். பஸ்களின் அதிவேகத்தை கட்டுப்படுத்த, வட்டாரப் போக்குவரத்து துறையினர் களமிறங்க வேண்டும்.