அவிநாசி:சேவூர் நிலக்கடலை ஏலத்தில், சராசரி விலையாக கிலோவுக்கு, 70 ரூபாய் வரை விவசாயிகள் பெற்று வருகின்றனர்.சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், நிலக்கடலை சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சீசன் இல்லாவிட்டாலும், வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில் கணிசமான அளவு நிலக்கடலை விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில், 86 விவசாயிகள், 500 மூட்டை வரை நிலக்கடலை எடுத்து வந்தனர்.திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 3 வியாபாரிகள் பங்கேற்றனர்.மறைமுக ஏலத்தின் வாயிலாக நடந்த ஏலத்தில், குவின்டாலுக்கு, முதல் ரகம், 6,950 ரூபாய் முதல், 7,150 ரூபாய்; இரண்டாம் ரகம், 6,400 ரூபாய் முதல், 6,950 ரூபாய்; மூன்றாம் ரகம், 5,450 ரூபாய் முதல், 6,400 ரூபாய் வரை ஏலம் போனது.மொத்தம், 8 மெட்ரிக் டன் நிலக்கடலை வரத்தாக இருந்தது; 7.80 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் கூறுகையில், 'நிலக்கடலை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்று நஷ்டமடைவதை தவிர்த்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக நடத்தப்படும் மறைமுக ஏலத்தின் வாயிலாக, விற்பனை செய்து, கூடுதல் வருமானம் ஈட்ட முன்வர வேண்டும்; ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகளுக்கான தொகை, அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது,' என்றார்.