| ADDED : ஆக 07, 2024 12:00 AM
திருப்பூர் : பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து திருப்பூர் மாவட்டம், மங்கலத்துக்கு சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், மங்கலத்துக்கு உட்பட்ட போலீஸ் 'செக்போஸ்ட்'களில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.நேற்று முன்தினம் நள்ளிரவில் அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூட்டை, மூட்டையாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 'குட்கா' பொருட்கள் இருப்பது தெரியவந்தது. வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.அதில், மங்கலத்தை சேர்ந்த பக்ருதீன், 47, அவிநாசிபாளையத்தை சேர்ந்த அப்துல் ரஹீம், 43 மற்றும் பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன், 40 என்பது தெரிந்தது. மூன்று பேரும் பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து குட்காவை வாங்கி கொண்டு, மங்கலத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்க கொண்டு வந்ததும், அதனை திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளில் சப்ளை செய்து விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரிந்தது.மூன்று பேரை கைது செய்த மங்கலம் போலீசார், ஆயிரத்து, ஒரு டன் எடையுள்ள கிலோ குட்கா, சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.