| ADDED : ஆக 10, 2024 09:18 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2023 - 24 கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ, மாணவியரும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் உள்ள மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு ஆலோசனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆலோசனை முகாம் வாயிலாக, 200 மாணவ, மாணவியர், கல்லுாரிகளில் இணைந்தனர். இவர்களில், 115 பேருக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டது. இதுவரை மூன்று கட்டங்களாக ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.நான்காம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாம், வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் கலெக்டர் அலுவலக அறை எண்: 705 ல் நடைபெற உள்ளது. கல்லுாரியில் இடம் கிடைக்காத மாணவ, மாணவியர், முகாமில் பங்கேற்று, உயர்கல்வியில் இணையலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.