| ADDED : ஏப் 28, 2024 01:38 AM
பல்லடம்,;பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியில் சேகரமாகும் அனைத்து வகையான கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை, கரைப்புதுார் - உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள நீர்நிலை அருகே கொட்டப்பட்டு வருகின்றன.பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகள் மலை போல் குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு, பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.விசாரித்த ஐகோர்ட், எட்டு வாரங்களுக்குள் குப்பைகளை அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உட்பட இதர அரசு துறைகளுக்கும் உத்தரவிட்டது. கோர்ட் விதித்த காலக்கெடு முடிந்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை.பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறுகையில், ''சுற்றுச்சூழலை பாதித்து வரும் குப்பை குவியலை அகற்ற வேண்டும் என, மார்ச் 1ம் தேதி சென்னை ஐகோர்ட் உத்திரவிட்டது. ஆனால், எட்டு வாரம் ஆகியும் கூட, குப்பை அகற்றப்படவில்லை. உரிய காலக்கெடுவுக்குள் குப்பையை அகற்றாதது கோர்ட் உத்தரவை மீறும் செயல். எனவே, அரசு நிர்வாகம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்'' என்றார்.